வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (30/11/2017)

கடைசி தொடர்பு:16:01 (30/11/2017)

`பிள்ளைகளின் உயிர்தான் முக்கியம்' - மழையால் வெளியேறிய பள்ளி மாணவர்கள்

ஒரு மழைக்கே வகுப்பறையில் தேங்கிய மழையால் குழந்தைகள் படிக்கமுடியாமல் தவிப்பதுமட்டுமின்றி, எந்த நேரத்திலும் பள்ளி  இடிந்து விழும் என்பதால், அச்சத்தில் குழந்தைகளை பள்ளியிலிருந்து வீட்டுக்கு பெற்றோர்கள் அழைத்துச் செல்லும் அவலம் அரியலூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.  

                 

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகேயுள்ளது வேணாநல்லூர் கிராமம். இங்கு 1989-ம் ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் தலைமையாசிரியர் ஒருவர், உதவி ஆசிரியர்கள் இரண்டுபேர் என மொத்தம் 3 ஆசிரியர்கள் வேலை பார்த்துவருகின்றனர். இந்தப் பள்ளியில் 65 மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். 1 முதல்  5-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வகுப்பறையிலும், 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வராண்டாவிலும் வைத்து வகுப்புகள் நடைபெறுகிறது.

                   

இந்தப் பள்ளியின் மேற்கூரை ஓடுகள் ஆங்காங்கே உடைந்தும், விரிசல்விட்டும் இருப்பதால், பருவமழையின் காரணமாக மழைநீர் கசிவு ஏற்பட்டு வகுப்பறையினுள் தண்ணீர் புகுந்தது. இதனால் மாணவர்கள் அமர வசதியின்றி, வராண்டா பகுதிகளில் மழைநீர் கசிவு ஏற்படாத இடத்தில் மாணவர்கள் நின்றபடி இருந்தனர்.

                 

மேலும், மழைக்காலம் என்றால் மாணவர்களுக்கு விடுப்புவிடுவதா வேண்டாமா என்பது ஆசிரியர்களுக்கே புரியாத நிலையாக உள்ளது. அக்கிராம மக்களே, "பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் பள்ளியின் நிலையை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பிள்ளைகளுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து அழைத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள் பெற்றோர்கள்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் கார்த்தியிடம் பேசினோம். "இப்பள்ளி கட்டடம் கட்டி 25 வருடங்கள் ஆகிறது. இன்று வரையிலும் சுவர்கள் மற்றும் ஓடுகள் மோசமான நிலையில் இருக்கிறது. இதை மாற்றுங்கள் என்று அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. சுவர்கள், ஓடுகள் தரமற்றதாக இருப்பதால் விரைவில் சுவர்கள் விரிசல் விட்டும், ஓடுகள் உடைந்தும் காணப்படுகிறது. மழையின்போது ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்ற மழைநீர் வடிந்து பிள்ளைகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர்கள் மடியில் நெருப்பைக்கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். தற்பொழுது பெய்துவரும் பெருமழையால் பெரியவிபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறையினர் பள்ளிக்கு மாற்று இடம் கொடுத்து தற்பொழுதுள்ள கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டித்தரவேண்டும்" என ஊர்மக்கள் சார்பில் கோரிக்கை வைத்தார்.