வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (30/11/2017)

கடைசி தொடர்பு:16:30 (30/11/2017)

`மனநோயால் பாதிக்கப்படுகிறார்கள்' - போலீஸாருக்கு நடத்தப்பட்ட மருத்துவ முகாம்

மக்களைக் காக்கும் காவலர்களுக்கு அவர்களின் உடலைக் காக்க மருத்துவ முகாம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. திரளான காவலர்கள் மருத்துவ முகாமில் கலந்துகொண்டனர்.

                   

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்கோட்டம் மற்றும் ஜெயங்கொண்டம் ராயல் சென்டினியல் அரிமா சங்கமும் இணைந்து காவல்துறையினருக்கான சிறப்பு கண்சிகிச்சை முகாம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. முகாமை ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கென்னடி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் ராயல்சென்டினியல் அரிமா சங்கத் தலைவர் சண்முகம், ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி தாளாளர் முத்துகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் சந்திரேஷ், மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மற்றும் அன்னை தெரசா நர்ஸிங் கல்லூரி மாணவிகள் பங்கேற்று 210 காவலர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு கண்புரை, கண் நீர் ஆழுத்த நோய், கிட்டப் பார்வை, தூரப்பார்வை ஆகிய குறைபாடுகளுக்கு சிகிச்சையளித்தனர். முகாமில் மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் அரிமா சங்க செயலாளர் சரவணன், நிர்வாகிகள் ஆனந்த்குமார், ஆறுமுகம், செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அரிமா சங்கத்தினரிடம் பேசியபோது, "காவலர்கள் நேரம் காலம் பார்க்காமல் மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான தூக்கம், சரியான சாப்பாடுகூட இல்லாமல் வேலை பார்ப்பதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். ஆய்வு ஒன்றில் ஓய்வு பெறும் போலீஸாரில் முக்கால்வாசிப் பேர் கண், மன நோயால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள். பொதுமக்களுக்காக இரவு, பகல் பார்க்காமல் கஷ்டப்படுகிறார்கள் காவலர்கள். அவர்களின் கஷ்டத்தை போக்கவே இந்த மருத்துவ முகாம். நாங்கள் இதுபோல் பல்வேறு நலத்திடங்களைக் காவல்துறையினருக்கு செய்துகொண்டிருக்கிறோம். இன்னும் பல முகாம்களை நடத்த இருக்கிறோம்" என்றார்.