`எதிரிகள் டெபாசிட் இழப்பார்கள்... தி.மு.க-தான் எங்களுக்குப் போட்டி!' - ஜெயக்குமார் கருத்து | Our opponent is DMK, Jayakumar on R.K.Nagar election

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (30/11/2017)

கடைசி தொடர்பு:15:55 (30/11/2017)

`எதிரிகள் டெபாசிட் இழப்பார்கள்... தி.மு.க-தான் எங்களுக்குப் போட்டி!' - ஜெயக்குமார் கருத்து

அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அமைச்சர் ஜெயக்குமார், `எங்களுக்கும் தி.மு.க-வுக்கும்தான் தேர்தலில் போட்டி இருக்கும்' என்று கூறியுள்ளார். 

ஜெயக்குமார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதியில், டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து நிற்கும் சசிகலா அணி சார்பில் தினகரன் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி, கலைக்கோட்டுதயத்தைக் களம் இறக்கியுள்ளது. இந்நிலையில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க-விலிருந்து மதுசூதனன் போட்டியிடுவார் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆட்சி மன்றக் குழு கூட்டத்துக்குப் பிறகு பேசிய ஜெயக்குமார், `அ.தி.மு.க-வின் அவைத்தலைவர் மதுசூதனனை, கட்சியின் ஆட்சி மன்றக் குழு ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளது. இந்த முடிவை நான் வரவேற்கிறேன். இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும். களத்தில் இருக்கும் எங்கள் எதிரிகள் டெபாசிட் இழப்பார்கள்' என்று சொன்னவரிடம், `தேர்தலில் உங்களுக்கும் தி.மு.க-வுக்கும் போட்டியா அல்லது உங்களுக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் போட்டியா' என்ற கேள்விக்கு, `களத்தில் எங்களுக்கும் தி.மு.க-வுக்கும் மட்டும்தான் போட்டி' என்று கூறினார் உறுதியாக.