வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (30/11/2017)

கடைசி தொடர்பு:16:01 (30/11/2017)

ரகு மரணத்துக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - ஸ்டாலின்

ரகுபதி மரணத்துக்கு, தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஸ்டாலின்

 

கோவையில் டிசம்பர் 3-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு, கோவை முழுவதுமே அலங்கார வளைவுகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இந்த அலங்கார வளைவு மோதி, மென்பொறியாளர் ரகுபதி என்ற இளைஞர் கடந்த வாரம் உயிரிழந்தார். அவர் மரணம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கோவையில் உள்ள ரகுபதி வீட்டுக்குச் சென்று, தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், அவரின் குடும்பதாருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம், "உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, கோவையில் அ.தி.மு.க-வினர் பேனர் வைத்துள்ளனர். இதன் மீது மோதி, மென்பொறியாளர் ரகு உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது.

மணக்கோலத்தில் இருக்க வேண்டியவர், தற்போது பிணக்கோலத்தில் இருக்கிறார். நான் செயல்தலைவரான உடனேயே, எந்த நிகழ்ச்சிக்கும் பேனர், கட் அவுட்கள் வைக்கக் கூடாது என்று கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளேன். ரகுவின் மரணத்துக்கு, தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கின்படி, கோவையில் பேனர் கட்அவுட்களை அகற்ற, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், பேனர், கட் அவுட்கள் வைக்க முறைப்படி அனுமதி கேட்டாலும் அனுமதிக்கக் கூடாது" என்றார்.