`ஜெயக்குமாரே மதுசூதனனைத் தோற்கடிப்பார்!' - புகழேந்தி கிண்டல்

அ.தி.மு.க சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, `ஜெயக்குமாரே மதுசூதனனைத் தோற்கடிப்பார்' என்று கிண்டலடித்துள்ளார். 

புகழேந்தி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில், டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து நிற்கும் சசிகலா அணி சார்பில் தினகரன் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி, கலைக்கோட்டுதயத்தைக் களம் இறக்கியுள்ளது. இந்நிலையில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க-விலிருந்து மதுசூதனன் போட்டியிடுவார் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, `மறுபடியும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களம் இறங்கியிருக்கிறோம். ஆர்.கே.நகர் மக்கள் எங்களுக்குத் துரோகம் செய்ய மாட்டார்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றியைப் பெற்றுத் தந்தார். அதைப்போல தினகரனும் வெற்றியைப் பெற்றுத் தருவார். அ.தி.மு.க சார்பில் மதுசூதனன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிகிறேன். எனவே, ஜெயக்குமாரே மதுசூதனனைத் தோற்கடிப்பார். நாங்கள் அவருக்கு எதிராக எந்த வேலையையும் செய்ய வேண்டியதில்லை. ஜெயக்குமாருக்கும் மதுசூதனனுக்கும் இடையில்தான் தகராறு இருக்கிறது. எங்களுக்கு தகராறு கிடையாது' என்று கலகலத்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!