வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (30/11/2017)

கடைசி தொடர்பு:17:30 (30/11/2017)

நிவாரண ஆவணங்களைப் பீரோவில் பூட்டிவைத்த வி.ஏ.ஓ! கலெக்டரிடம் பொங்கிய விவசாயிகள்

''வறட்சி நிவாரணம் வழங்கக்கூடிய ஆவணங்களை வி.ஏ.ஓ, தலையாரி ஆகியோர் அவர்களின் பீரோவுக்குள் மறைத்துவைத்து எங்களுக்கு நிவாரணம் கிடைக்கவிடாமல் செய்துவிட்டார்கள். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் நிவாரணம் பெற்றுத் தர வேண்டும்'' என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள் சூராணம் கிராம விவசாயிகள்.

 

இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ஜான்போஸ்கோ பேசும்போது, "சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி சூராணம் பஞ்சாயத்தில் 2016 - 2017-ம் ஆண்டுக்கான வறட்சி நிவாரணம் 127 விவசாயிகளுக்கு மட்டும் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் கொடுக்கப்பட்ட ஆணவங்கள் அனைத்தும் தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டுபோய் சேர்க்காமல் வி.ஏ.ஓ பீரோவில் பூட்டிவைத்துவிட்டார். அது அப்படியே இருந்துவிட்டது. வி.ஏ.ஓ மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ட.டி.ஓ, கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரியென புகார் கொடுத்தும் அவர்கள்மீது நடவடிக்கை இல்லை. எங்களுக்கு நிவாரணமும் வரவில்லை. நீண்ட போராட்டங்களுக்கிடையில் மறைத்துவைக்கப்பட்ட ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டது. அந்த ஆவணங்கள் பேரிடர்மேலாண்மை அலுவலகத்துக்குப்போனது. அங்கே சில கரெக்ஷன் போட்டு ஃபைல் திரும்பவும் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த ஆவணங்கள் கடந்த ஆறுமாத காலமாக அப்படியே கிடக்கிறது. அதிகாரிகள் செய்த தவறுக்கு நாங்கள் பழியாக முடியுமா. பதில் சொல்ல அதிகாரிகள் இல்லை. இந்தக் கொடுமையை எங்கே சொல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை" என்கிறார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க