'பணத்தைக் கொடு; இல்ல கிட்னியைக் கொடு என்கிறார்' - கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி-யிடம் கதறல்

கந்துவட்டியின் கொடுமையால் திருநெல்வேலியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. தற்போது வாங்கிய கந்துவட்டிக் கடனை அடைக்க முடியாததால் கிட்னியைக் கேட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு எஸ்.பி அலுவலகத்துக்கு இன்று காலை வந்திருந்த பாரதி என்ற பெண் கூறுகையில், ''என் கணவர் பெயர் மணி. எங்களுக்கு கார்த்திகேயன், சூர்யா என்ற இரண்டு பசங்க. கார்த்திகேயன் தனியார் ஜவுளிக்கடைக்கு வேலைக்குப் போகிறார். சின்ன பையன் கல்லூரி படிக்கிறான். என் கணவர் ஹோட்டல் கடைக்கு வேலைக்குப்போகிறார். நாங்க ஈரோடு வெண்டிபாளையத்தில் குடியிருக்கிறோம். நான் பாசூரைச் சேர்ந்த ஜெயந்தி என்பவரிடம் கடன் வாங்கி எங்க ஊரில் உள்ள முருகனுக்கு 10 ஆயிரம், ராணிக்கு 20 ஆயிரம், பாரதிக்கு 50 ஆயிரம் எனப் பலருக்கும் கொடுத்தேன். மொத்தம் ரூ.3,10,000 ஜெயந்தியிடம் கடன் வாங்கிக் கொடுத்தேன். கடன் வாங்கியவர்கள் வாங்கிய கடன் தொகையைவிட அதிகமாக வட்டி கட்டிவிட்டார்கள்.

நான் சொந்தமாக 1,80,000 கடன் வாங்கினேன். மாதம் 9 ஆயிரம் என 15 மாதத்தில் 1, 05,000 கட்டி இருக்கிறேன். கடந்த 4 மாதமாக உடல் நிலை சரியில்லாததால் வட்டியைக் கட்ட முடியவில்லை. அதனால் ஜெயந்தியும் அவருடைய தம்பியும் சேர்ந்துகொண்டு ஒழுங்காக வட்டியைக் கட்டி விடு; இல்லையென்றால் உன்னுடைய கிட்னியை விற்றுக் கொடு என்கிறார்கள். கிட்னி விற்பனை செய்ய அவர்களிடமே ஏஜென்ட் இருக்கிறதாம். ஒரு கிட்னி 10 லட்சத்துக்கு வரும். நான் கடன் தொகையாக 5 லட்சம் எடுத்துக்கொள்கிறேன். நீ 5 லட்சம் வாங்கிகிட்டு நிம்மதியாக இருக்கலாம். 10 வருடம் கேரன்டி. அதுக்குப் பிறகு நீ, இருந்தால் என்ன, இறந்தால் என்ன. ஒழுங்கா கடனைக் கட்டு இல்லையென்றால் கிட்னியைக் கொடுத்துவிடு என்று மிரட்டி அடிக்கிறார்கள்'' என்று கதறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!