வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (30/11/2017)

கடைசி தொடர்பு:18:00 (30/11/2017)

சாலைகளில் விழுந்த மரங்களை களத்தில் இறங்கி அகற்றியது போலீஸ்!

தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் செங்கோட்டை-புனலூர் சாலையில் விழுந்த மரங்களை அகற்றி நெல்லை போலீஸார் போக்குவரத்தைச் சரி செய்தனர்.

மழைப் பணியில் போலீஸார்

குமரி கடலின் அருகே மையம்கொண்டுள்ள ஒகி புயலின் தாக்கம் நெல்லையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தப் புயலின் காரணமாக இரவிலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் வீடு இடிந்து விழுந்தது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. கே.டி.சி நகர் பகுதியில் மின்சாரக் கம்பத்தின் மீது மரம் விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்தன. அதனால் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் உட்கோட்டத்திலும் பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு அமைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் காவலர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவை இணைக்கும் செங்கோட்டை-புனலூர் சாலையில் மழையால் மரங்கள் விழுந்ததால், போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து சாலையில் விழுந்த மரங்களைத் தென்காசி நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸாரும் வனத்துறையினரும் இணைந்து அகற்றி, போக்குவரத்தைச் சரிசெய்தனர்.

சாலை பராமரிப்பு

செங்கோட்டை அருகே பள்ளக்கால் இந்திரா காலனியில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மழை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. அப்பகுதி மக்களிடம் பாப்பாகுடி காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும் இணைந்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தினர். குற்றாலம் பராசக்தி கல்லூரி அருகே சாலையில் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்களை, போலீஸாரே அப்புறப்படுத்தினர். அதேபோல, கடையம் அருகே முதலியார்பட்டி பகுதியில் சாலையில் கிடந்த மரத்தை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீஸார் அகற்றி போக்குவரத்தைச் சரிப்படுத்தினர். மழையால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை அகற்றும் வகையில் துரிதமாகக் களம் இறங்கி போக்குவரத்தைச் சீர்படுத்திய நெல்லை போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.