வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (30/11/2017)

கடைசி தொடர்பு:16:37 (30/11/2017)

`ஒகி' புயல் அமைச்சர்களை அலர்ட் செய்த முதல்வர் பழனிசாமி!

‘ஒகி’ புயல் காரணமாகப் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்களுக்கும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக் கடற்கரையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழ்நாட்டின் அநேக இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், வங்கக் கடலில் உருவாகியுள்ள, குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் சுமார் 170 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தீவிரமடைந்து `ஒகி' புயலாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் தமிழக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், குறிப்பாகக் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களை உரிய  முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்க உத்தரவிட்டுள்ளேன். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு சென்று, நிவாரண முகாம்கள், பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கவும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கிடவும் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைத்திடவும் உத்தரவிட்டுள்ளேன்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கவும் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளவும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டி.கே.ராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்டத்துக்கு குமார் ஜெயந்த், திருநெல்வேலி மாவட்டத்துக்கு முனைவர் ராஜேந்திரகுமார், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு டாக்டர் பி.சந்தரமோகன் ஆகிய கண்காணிப்பு அலுவலர்களையும் அந்தந்த மாவட்ட அமைச்சர்களையும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரையும் உடனடியாகச் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளேன்.

மழைநீர் புகாத வண்ணம் தெருவோர மின் பகிர்மான பெட்டிகளை நல்ல முறையில் பராமரித்து, அவற்றை உயரத்தில் அமைக்க வேண்டும்  எனவும், தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் மின் மோட்டார்களைப் பயன்படுத்தி தண்ணீரை விரைவாக வெளியேற்ற வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம்களை  நடத்தி, தொற்று நோய்கள் ஏற்படாத வண்ணம் அப்பகுதிகளைச் சுத்தம் செய்து பிளிச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள 70 நபர்கள் அடங்கிய மாநிலப் பேரிடர் மீட்புக்    குழு விரைந்துள்ளது. மேலும், 60 நபர்கள் அடங்கிய இரண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களும் விரைந்துள்ளன. பலத்த காற்று வீசியதால்  மரங்கள் முறிந்து மின் கம்பங்களின் மீது விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட மின் தடையைச் சீரமைக்கும் பணிக்காக, மதுரை மின் பகிர்மான அலகிலிருந்து பணியாளர்கள் தகுந்த உபகரணங்களுடன் விரைந்துள்ளனர். இப்பணிகளைத் துரிதப்படுத்த மின் பகிர்மான கழகத்தின் இயக்குநர், மின் உற்பத்தி கழகத்தின் இயக்குநரும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடனடியாகத் தக்க நிவாரணம் கிடைத்திட தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சம்பவ இடத்தில் பணிகளைக் கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளதால், மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.