`ஸ்டாலின் செய்வது மோசமான அரசியல்..!' - கடுகடுத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, `கோவையில் இளைஞர் இறந்த விஷயத்தில் ஸ்டாலின் செய்வது மோசமான அரசியல்' என்று கூறியுள்ளார். 

எஸ்.பி.வேலுமணி

கோவையில் டிசம்பர் 3-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு, கோவை முழுவதுமே அலங்கார வளைவுகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இந்த அலங்கார வளைவு மோதி, மென்பொறியாளர் ரகுபதி என்ற இளைஞர் கடந்த வாரம் உயிரிழந்தார். அவர் மரணம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, இன்று ரகுபதி குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின். பின்னர் செய்தியாளர்களிடம், `உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, கோவையில் அ.தி.மு.க-வினர் பேனர் வைத்துள்ளனர். இதன் மீது மோதி, மென்பொறியாளர் ரகு உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது. அவர் மரணத்துக்கு, தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்' என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, `தி.மு.க-வைப் பொறுத்தவரை கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். இதே தி.மு.க-தான் கோவையில் செம்மொழி மாநாடு என்ற குடும்ப விழாவை நடத்தியது. அரசு சார்பில் பல திட்டங்களும் நிதி ஒதுக்குதலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில்தான் நடக்கிறது. மாவட்டங்களுக்கு திட்டங்களும் வளர்ச்சியும் வர வேண்டும் என்னும் நோக்கில் நூற்றாண்டு விழாக்களை நாங்கள் பயன்படுத்திக்கொள்கிறோம். எனவே, எங்களுக்கு வளைவுகள் அமைப்பதில் ஆர்வமில்லை. விழா மூலம் கோவைக்கு திட்டங்கள் வர வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறோம். கோவையில் இளைஞர் இறந்தது விபத்தால்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவரின் இறப்பு வேனைக்குரியதுதான். அவரின் இறப்பை வைத்து அரசியல் செய்கிறார்கள். இந்த விஷயத்தில் மு.க.ஸ்டாலின் செய்வது மோசமான அரசியல்' எனக் கடுகடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!