வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (30/11/2017)

கடைசி தொடர்பு:18:57 (30/11/2017)

`ஓர் உயிர் போதாதா தமிழக அரசே?' - கோவையில் போராட்டக்காரர்கள் ஆவேசம்

கோவையில் டிசம்பர் 3-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு, கோவை முழுவதுமே அலங்கார வளைவுகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இந்த அலங்கார வளைவு மோதி, மென்பொறியாளர் ரகுபதி என்ற இளைஞர் கடந்த வாரம் உயிரிழந்தார். அவர் மரணம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பேனர்

குறிப்பாக, நீதிமன்ற தீர்ப்பை மீறி கோவையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கின்படி, கோவையில் அனுமதியின்றி, பொது மக்களைப் பாதிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சில பேனர்கள் அகற்றப்பட்டன. ஆனால், தற்போதும் பொது மக்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் விதத்தில் அபாயகரமான பேனர்கள் ஏராளமானவை அகற்றப்படாமல் உள்ளன. இதனால், அந்தப் பேனர்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே, மக்களுக்குப் பாதிப்பைத் தரக்கூடிய இந்தப் பேனர்களை அகற்ற வேண்டும் என மக்கள் பாதை அமைப்பு சார்பில் கோவை, அண்ணா சிலை அருகே போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, "அரசே விதிகளை மீறுவதேன்; ஓர் உயிர் போதுமா; நிறைய வேணுமா" என்ற வாசகத்தைக் கையில் ஏந்தியபடி போராட்டக்கார்கள் அரசுக்கு எதிராக ஆவேசமாக முழக்கமிட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க