வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (30/11/2017)

கடைசி தொடர்பு:18:45 (30/11/2017)

போலி சாதிச் சான்றிதழ் விவகாரம்! கிருஷ்ணசாமிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

போலி சாதிச் சான்றிதழ் பெற்றதாகத் தொடர்ந்த வழக்கில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த மள்ளர் பாரதம் அமைப்பின் செயலாளர் சிவஜெயப்பிரகாஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் என்று போலி சாதிச் சான்றிதழ் பெற்றுள்ளார். இந்தச் சான்றிதழின் அடிப்படையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இவர் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் நிரந்தரச் சாதிச் சான்றிதழ் பெற்றுள்ளார். நிரந்தர சாதிச் சான்றிதழ் அவர் பிறந்த கிராமத்தில்தான் பெற முடியும். எனவே, இவர் போலியாகப் பெற்றுள்ள சாதிச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட அமர்வு, இது குறித்து பதில் அளிக்க கிருஷ்ணசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப  உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.