வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (30/11/2017)

கடைசி தொடர்பு:19:00 (30/11/2017)

`போலீஸ் அழைத்துச் சென்ற ராணுவ வீரர் எங்கே?' - நீதிமன்றத்தை நாடிய மனைவி

திருமங்கலம் காவல் ஆய்வாளர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட ராணுவ வீரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி அவரின் மனைவி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த பாண்டிச்செல்வி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்தமனுவில், ``ராணுவத்தில் பணியாற்றி வரும் என் கணவர் கார்மேக கண்ணன் விடுமுறைக்காக வந்திருந்தார். கடந்த 21-ம் தேதி சாத்தங்குடி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த என் கணவரை அங்கு ரோந்து வந்த திருமங்கலம் காவல் ஆய்வாளர் தாக்கியுள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட கைகலப்பில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து என் கணவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், என் கணவர் தப்பித்துவிட்டதாகவும் விசாரணை எனக் கூறி, கடந்த 23-ம் தேதி என் உறவினர் பழனிச்சாமி, மாரிமுத்து, கார்த்திக், சேகர் ஆகியோரை திருமங்கலம் காவல் ஆய்வாளர் அழைத்துச் சென்றார். ஆனால், இன்று வரை என் கணவர் மற்றும் உறவினர்களுக்கு என்ன ஆனது. அவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை.

இது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் சென்று கேட்டபோது எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. என் கணவர் மற்றும் உறவினர்கள் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்பதோடு, அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாகச் சந்தேகம் உள்ளது. இது குறித்து உயரதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே, என் கணவர் மற்றும் உறவினர்களை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சுப்பையா, ஜெகதீஸ் சந்திரா ஆகியோர் கொண்ட அமர்வு, இது குறித்து மதுரைக் காவல்துறை கண்காணிப்பாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.