வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (30/11/2017)

கடைசி தொடர்பு:16:59 (30/11/2017)

கோவையில் மு.க.ஸ்டாலின் - வைகோ திடீர் சந்திப்பு!

கோவை விமான நிலையத்தில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தித்துக் கொண்டனர்.

ஸ்டாலின் - வைகோ

தி.மு.க முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தம்பி மகள் வித்யா கோகுல் உடல்நலக்குறைபாடு காரணமாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது, மரணம் குறித்து துக்கம் விசாரிப்பதற்காக, தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை வந்திருந்தார். வித்யா கோகுலின் மரணம் குறித்து துக்கம் விசாரித்துவிட்டு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்ட அலங்கார வளைவு மோதி, உயிரிழந்த ரகுவின் வீட்டுக்குச் சென்று, அவரின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர், சென்னை செல்வதற்காகக் கோவை விமான நிலையத்துக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது வித்யா கோகுல் மறைவுக்கு துக்கம் விசாரிப்பதற்காக, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கோவை விமான நிலையம் வந்திருந்தார். அப்போது. மு.க.ஸ்டாலினும் வைகோவும் சந்தித்துப் பேசிக்கொண்டனர். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர்.

இந்தச் சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்தது. ஆர்.கே.நகர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இது பரபரப்பாகப் பேசப்பட்டநிலையில், `மரியாதை நிமித்தமான சந்திப்புதான். ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து இந்த சந்திப்பில் பேசவில்லை' என்று வைகோ விளக்கம் அளித்துள்ளார்.