அன்புச்செழியன் அலுவலகத்தில் போலீஸார் அதிரடி சோதனை! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் அன்புச்செழியனின் சென்னை அலுவலகத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். 

சோதனை நடத்தப்பட்ட அன்புச் செழியன் அலுவலகம்


இயக்குநரும் நடிகருமான சசிகுமாரின் உறவினர் அசோக்குமார், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அன்புச்செழியன் என்பவரிடம் வாங்கிய கடனுக்காகத் தொல்லை அதிகரிக்கவே, அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அசோக்குமார் எழுதிவைத்த கடிதத்தின் அடிப்படையில், அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரை, 3 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடிவருகின்றனர்.

அன்புச்செழியனின் மேலாளர்களாக இருந்த முருகன் குமார், சாதிக் ஆகியோரை சென்னையில் நேற்று கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன் ஜாமீன் கோரி அன்புச்செழியன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னை தி.நகரில் உள்ள அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தில் போலீஸார் இன்று சோதனை நடத்தினர். கந்துவட்டி தொடர்பான ஆவணங்கள் இருக்கிறதா என்று போலீஸார் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி சோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டதாகவும் போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சோதனை முடிவில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!