வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (30/11/2017)

கடைசி தொடர்பு:18:42 (30/11/2017)

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்குமா ம.தி.மு.க?

ஸ்டாலின் மற்றும் வைகோ

கோவை விமான நிலையத்தில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினும், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் சந்தித்துக்கொண்டனர். ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நேரத்தில் நிகழ்ந்திருக்கும் இந்தச் சந்திப்பானது அரசியல் ஆர்வலர்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆர்.கே நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அப்போது தேர்தல் களத்தில் அ.தி.மு.க., இரு அணிகளாகப் பிரிந்து நின்றன. இதில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில், மதுசூதனனும், எடப்பாடி பழனிசாமி அணி சார்பில், டி.டி.வி தினகரனும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்தனர். தி.மு.க சார்பில், மருதுகணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில், தொகுதி மக்களுக்கு முறைகேடாகப் பணப்பட்டுவாடா செய்து வாக்கு சேகரித்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு தினத்துக்கு இரண்டு நாள்கள் முன்பாகவே தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு, 'ஆர்.கே நகர் தேர்தல் எப்போது நடக்கும்...' என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், 'டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என்று கடந்த 24 ஆம் தேதி (24-11-2017) அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் மீண்டும் ஆர்.கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் களைகட்டத் தொடங்கியது.

இப்போதும் தி.மு.க சார்பில், மருதுகணேஷே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சசிகலா அணி வேட்பாளராக டி.டி.வி தினகரன் போட்டியிடுகிறார். இதற்கிடையில், அ.தி.மு.க சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அக்கட்சியின் அவைத்தலைவரான மதுசூதனனையே வேட்பாளராக அறிவித்தனர். மண்ணின் மைந்தர்களான மருதுகணேஷ், மதுசூதனன் ஆகியோர் நேருக்கு நேர் களமிறங்கியிருக்கும் சூழலில், டி.டி.வி தினகரனும் அவர்களுக்குப் பலத்தப் போட்டியாக இருப்பார் என்கிறார்கள் தொகுதி மக்கள்.

தி.மு.க வேட்பாளரான மருதுகணேஷுக்குப் பல்வேறு கட்சிகளும் தங்களது ஆதரவைத்  தெரிவித்துவருகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, "நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில், தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவளிக்கும். தி.மு.க-வின் செயல்தலைவர் கடிதம் மற்றும் தொலைபேசியின் வாயிலாகக் கேட்டுக்கொண்டதுக்கிணங்க தி.மு.க-வை ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.

சில தினங்களுக்கு முன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மாநிலத் தலைவர் முத்தரசன், மூத்த தலைவர்களான நல்லக்கண்ணு, தா.பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, ''இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க-வுக்கு ஆதரவு அளிக்கும்'' என்று கூறினார்கள். அதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி போன்ற கட்சிகள் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கிணங்க தி.மு.க-வுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளது.
  
இந்தநிலையில் இன்று (30-11-2017) மதியம் கோவை விமான நிலையத்தில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினும், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் நேருக்குநேர் சந்தித்துக்கொண்டனர். இந்தச் சந்திப்பானது 'தி.மு.க-வுக்கு, ம.தி.மு.க ஆதரவளிக்குமா...' என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இருப்பினும் பத்திரிகையாளர்களிடம் பேசிய வைகோ, "ஆர்.கே நகர் தேர்தல் தொடர்பாக ஸ்டாலினுடன் எதுவும் பேசவில்லை. அரசியல் நாகரிகம் காரணமாக சந்தித்துப் பேசுவதில் தவறில்லை" என்று கூறினார். வருகின்ற டிசம்பர் 3 ஆம் தேதி ம.தி.மு.க-வின் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதில் தி.மு.க-வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.