வெளியிடப்பட்ட நேரம்: 09:32 (01/12/2017)

கடைசி தொடர்பு:15:37 (02/12/2017)

’’ஆமாம்... சோபன் பாபுவை எனக்குப் பிடிச்சிருக்கு!’’ - தில் ஜெயலலிதா #FlashBack #WhatHappenedThen?

சோபன் பாபு

'உண்மை உறங்காது!.. அதை ஒளித்து வைக்கவும் முடியாது' என்பார்கள். ஜெயலலிதா விஷயத்தில் அப்படியே சம்பவங்கள் நிகழ்கின்றன. 
தமிழக அரசியல்  களத்தில் அக்காலம் முதல் இக்காலம் வரையில் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பொதுவெளியில் பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டதுண்டு. இந்நாளில் முக்கிய தலைவர்கள் பலர் இருமணதாரர்களாக  உலவுகின்றனர். ஆனால், ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாக அவை மக்களிடம் பேசுபொருளாக இருந்ததில்லை. அவர்களது பொதுவாழ்வை மட்டுமே அளவுகோலாக வைத்து விமர்சிக்கின்றனர் மக்கள். இருக்கும்போதே இவர்களுக்கெல்லாம் எழாத சிக்கல், ஜெயலலிதாவுக்கு மட்டும் அவர் இறந்தபிறகும் சிக்கல்கள் சிறகடிக்க ஆரம்பித்திருப்பது அதிர்ச்சியான ஒன்று!

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா, 'தான் ஜெயலலிதாவின்   சொந்த மகள்' என பரபரப்பு கிளப்பியிருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் ஓரிருவர் இப்படி கிளம்பி வந்ததுண்டு. ஆனால், யாரும் சட்டரீதியாக தங்கள் கோரிக்கைக்கு வலு சேர்த்ததில்லை. நீதிமன்றத்தால் குட்டுப்பட்டனர். அரிதாக ஒரு 'மகன்' சிறையிலடைக்கப்பட்டார்.  இப்படி பத்திரிகைப் பரபரப்போடு அதன் ஆயுட்காலம் முடிந்துவிடும். ஆனால், முதன்முறையாக அம்ருதா, உச்சநீதிமன்றத்தின் கதவை வலுவாகத் தட்டி,  தமிழக அரசியல் களத்தின் பரபரப்பு பெண்மணியாக மாறியிருக்கிறார்.  இதுகுறித்து அவர்  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியிருப்பதும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. 

உச்ச நீதிமன்றத்தில், அம்ருதா தாக்கல் செய்த மனுவில், ‘1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி ஜெயலலிதாவின் மகளாக நான் பிறந்தேன். என் வளர்ப்பு தாய் சைலஜா 2015 இல் இறந்துவிட்டார். வளர்ப்பு தந்தை சாரதி இந்த ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இறந்துவிட்டார்.  ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்பதால், இந்த உண்மையை இதுநாள் வரையிலும் நான் வெளிப்படுத்தவில்லை. எனவே, ஜெயலலிதாதான் என் தாய் என்பதை நிரூபிக்க, மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலைத் தோண்டி எடுத்து டி.என்.ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். வைஷ்ணவ  ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட வேண்டும்’ எனவும்  கூறியிருந்தார். 

அம்ருதாஇம்மனுவை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அம்ருதாவுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உண்மையை கர்நாடக உயர் நீதிமன்றம் வெளிக்கொண்டுவரும் முன் உண்மையில் ஜெயலலிதா - சோபன்பாபு நட்பு எத்தகையது என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்....

திருச்சி ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா பிறந்தது மைசூர். மைசூர் மகாராஜாவின் குடும்பத்தில் மணமகளாகச் சென்ற சந்தியாவுக்கு ; ஜெயக்குமார், ஜெயலலிதா என  இரு பிள்ளைகள் பிறந்தபின் கணவரை இழந்து வறுமைக்கு ஆளானார். சென்னையில் தங்கியிருந்து திரைப்படங்களில் நடித்துவந்த தங்கை வித்யாவதியின் வீட்டில் தஞ்சம் புகுந்தார். வித்யாவதி வீட்டுக்கு வந்த தயாரிப்பாளர்களின் கண்களில் சந்தியா தென்பட, மளமளவென படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திரைப்படங்களில் பிஸியானதால் பிள்ளைகளை  தனது தாயின் பாதுகாப்பில் பெங்களூருவில் படிக்கவைத்தார். நேரம் கிடைக்கும்போது பிள்ளைகளை சென்று சந்திப்பார். 8 வயதில் ஜெயலலிதாவின் முதல் சினிமா பிரவேசம் 'ஸ்ரீசைல மகாத்மியம்' என்ற படத்தில் நிகழ்ந்தது. வளர்ந்தபின் 'நன்னகர்த்தவ்யா' என்ற கன்னடப் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.  

தமிழில் அவரது முதற்படமாக 'வெண்ணிற ஆடை' வெளியானது. ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ஜெயலலிதாவுக்கு நல்ல புகழைக் கொடுத்தது. பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடுத்தர வயதைக்கடந்த நடிகைகள் அப்போது நடித்துவந்ததால், இளமையான கல்லூரிப்பெண் போன்ற தோற்றம் கொண்ட ஜெயலலிதாவுக்கு தமிழக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கன்னடத்தில் அவரைக் கதாநாயகியாக அறிமுகம் செய்த பி.ஆர் பந்துலு, எம்.ஜி.ஆரை வைத்து தான் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு கதாநாயகி ஆக்கினார். ஒரே இரவில் ஜெயலலிதாவின் சினிமா கிராப் உயரத்துக்கு வந்தது. சில வருடங்களில், ஜெயலலிதா தென்னகத்தின் புகழ்மிக்க நடிகைகளில் ஒருவரானார். பத்து வருடங்களில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என  பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துமுடித்தார். அந்தந்த மொழிகளில் புகழ்பெற்ற நடிகர்கள் அவருடன் நடிக்க ஆர்வம் காட்டினர். ஒருமுறை தனக்குப் பிடித்த நடிகரான திலீப்குமாரின் படம் ஒன்றில் அட்வான்ஸ் பெற்றபின்னும் படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லை எனக் கூறி நடிக்க மறுத்தார். அந்தளவுக்கு புகழடைந்திருந்தார். 

தமிழில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஜோடிக்கு பெரும் வரவேற்பு இருந்தது. எம்.ஜி.ஆருடன்  அதிகப்படங்களில் நடித்த கதாநாயகி ஜெயலலிதாதான். மொத்தம் 28 படங்களில் அவர்கள்  இணைந்து நடித்தனர். ஆனால், 'பட்டிக்காட்டுப் பொன்னையா' திரைப்படத்துடன் அவர்களது உறவில் கீறல் விழுந்தது. தனது  கனவுப்படமான 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில், ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு தராமல், அன்றைக்குப் புதுமுகங்களை அறிமுகம் செய்தார் எம்.ஜி.ஆர். இளமைப் பொலிவுள்ள கதாநாயகன் என்ற தனது இமேஜை தக்கவைத்துக்கொள்ள எம்.ஜி.ஆர்  இப்படி செய்ததாக சொல்லப்பட்டது. அதற்கு முன்னரே அவர்களுக்குள் பிரச்னை இருந்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் அடிபட்டன. எப்படியோ, பிரச்னை தொடங்கிய 1971 ஆம் ஆண்டு 3 படங்கள், 1972-ல் 2 படங்கள், 1973-ல் 'பட்டிக்காட்டுப்பொன்னையா' என்ற ஒரேயொரு படம் என எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா என்ற வணிக சினிமாவின் வெற்றி இணை நிரந்தரமாகப் பிரிந்தது. தனது வாழ்வில் முக்கிய ஆளுமை செலுத்திய இருவரில், ஒருவர் என எம்.ஜி.ஆரைக் குறிப்பிட்டவர் ஜெயலலிதா. 1971 நவம்பரில் தாயை இழந்த ஜெயலலிதா, 1973 ஆம் ஆண்டுடன்  எம்.ஜி.ஆரிடமிருந்தும் பிரிய நேர்ந்தது. இதன்பிறகு ஜெயலலிதா வாழ்வில்,  பெரும் சூன்யமான நாட்கள். வாழ்க்கையில் பிடிப்பின்றி காலம் கழித்தார். அரிதாகவே படங்களில் தலைகாட்டினார். 
இந்த காலகட்டத்தில்தான் சோபன்பாபு என்ற பெயர் தமிழ்த்திரையுலகில் ஜெயலலிதாவை நன்கறிந்த வட்டாரத்தில் பேசப்பட்டது.

அன்றைய தெலுங்குத் திரையுலகில் பெண் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தவர் சோபன்பாபு. என்.டி.ஆர் நாகேஸ்வரராவ் போன்ற உச்சநட்சத்திரங்களுக்கு அடுத்த வரிசை நடிகரான அவருக்கு முந்தைய இரு நடிகர்களைவிட பெண் ரசிகர்கள் அதிகம். தனது துறுதுறு நடிப்பு நளினமான நடன அசைவுகளால் பெண் ரசிகர்களை கிறங்கடித்த கதாநாயகனாக வளர்ந்துவந்தார். அவருடன் ஜெயலலிதா தன் ஆரம்பகாலங்களில் ஒரு சில படங்களில் இணைந்து நடித்தார்.  பெரிய அளவில் அவர்களுக்குள் ஈர்ப்பு இருந்ததாக அக்காலத்தில் பேச்சு இருந்ததில்லை. ஜெயலலிதா அப்போது தமிழில் பெரும் பிரபல்யமாக இருந்ததால் அவர் திரையுலக வாழ்க்கை மட்டுமே பேசப்பட்டது. எம்.ஜி.ஆரின் சினிமா ஜோடி என்றளவில் மட்டுமே பேசப்பட்டார். 

சோபன்பாபுஆனால் பிற்காலத்தில் சினிமாவில் இருந்து துறவறம் மேற்கொண்டிருந்த காலத்தில்தான் ஜெயலலிதா சோபன்பாபு நட்பு குறித்து பேசப்பட்டது. 

எம்.ஜி.ஆருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தபின் ஜெயலலிதாவின் சினிமா கிராப் அப்படியொன்றும் ஏற்றமாக இல்லை. இளம் வயதைக்கடந்த நிலையில், வயதுக்கேற்ற படங்களை அவர் தேர்வு செய்யவேண்டிய சூழல்உருவானது. கதாநாயகி என்பதுபோய் கதைக்கு நாயகியாய் குணச்சித்திர பாத்திரங்கள் அவரைத் தேடி வந்தன. இந்தக் கோபத்தில், அப்போது வெளியான சில பத்திரிகைகளில் பெயரைக் குறிப்பிடாமல், எம்.ஜி.ஆரைத் தாக்கிப் பேட்டியளித்தார் ஜெயலலிதா. பத்திரிகைகளுக்கு எம்.ஜி.ஆர் போன் செய்து பேசவேண்டிய தர்மசங்கடம் வந்தது.

 1974 ஆம் ஆண்டு நூறாவது படமான 'திருமாங்கல்யம்' வெளிவந்தது. அடுத்த ஆண்டில் 3 படங்கள் என ஜெயலலிதாவின் திரைப்பட எண்ணிக்கை தேய ஆரம்பித்தது. 1975 ஆம் ஆண்டு திரையுலகிலிருந்து விலகப்போவதாக பத்திரிகை பேட்டி ஒன்றில் அறிவித்தார் ஜெயலலிதா. இந்தக் காலகட்டத்தில்தான் தெலுங்கில் பிரபல கதாநாயகனான சோபன்பாபுவுடன் ஜெயலலிதா நட்புடன் இருப்பதாகப் பேசப்பட்டது. எம்.ஜி.ஆரை வெறுப்பேற்றும் விதமாக தன் தெலுங்கு சகாவான சோபன்பாபுவுடன் ஜெயலலிதா வேண்டுமென்றே அப்படி ஒரு நட்பை வலிந்து ஏற்படுத்திக்கொண்டதாகச் சொல்லப்பட்டது. 1975 ஆம் ஆண்டு பிற்பகுதியில் திரையுலகிலிருந்து முற்றாக ஒதுங்கியிருந்த ஜெயலலிதா, சென்னை போயஸ் கார்டன் இல்லம், ஹைதராபாத் தோட்டம் இவற்றோடு இருந்து கொண்டார்.  பத்திரிகைகள் அரிதாகவே அவரைப்பற்றிய செய்திகளை வெளியிட்டன. அதுவும் அவரது புகழுக்கு எதிரானவை. 


அதாவது அதுவரை  கிசுகிசுவாக பத்திரிகைகளிலும், செவிவழியாக திரைவட்டாரத்திடம் பகிரப்பட்ட தகவல்கள் புகைப்பட சாட்சியாக வெளியானது. ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் எடுக்கப்பட்ட அந்த படங்களில் சோபன்பாபுவும் ஜெயலலிதாவும் மிக நேருக்கமாக கணவன் மனைவிபோல இணைந்து போஸ் அளித்து எடுக்கப்பட்டவை. தனது பிரத்யேக புகைப்படக்காரர் மூலம் ஜெயலலிதா எடுத்ததாக சொல்லப்பட்ட படங்களில் ஜெயலலிதா சோபன்பாபுவுக்கு உணவு பரிமாறுவது, வீட்டுச் சுவரில் மாட்டியுள்ள படங்களைக்காட்டி மகிழ்தல், ஜெயலலிதாவின் அலுவலக அறையில் சோபன்பாபு அமர்ந்து விருந்தினரிடம் பேச அருகில் சேரின் மற்றொரு முனையில் அமர்ந்து அதை ரசிப்பது, தனது பர்சனல் அறையில் ஜெயலலிதா வீணை வாசிக்க, அதை ரசித்துப்பார்க்கும் சோபன்பாபு, ஜெயலலிதா மாடியிலிருந்து காரில் கிளம்பிச்செல்லும் சோபன்பாபுவுக்கு ஒருமனைவியைப்போல் கையசைத்து அனுப்பிவைப்பது என ஒரு குடும்பத்தலைவியாக ஜெயலலிதாவை அடையாளம்காட்டும் படங்கள் அவை.

இதில் ஒரு படம் ஜெயலலிதா மிகவும் மகிழ்ந்து காட்டிய படம். மகிழ்ச்சிக்கு காரணம் அந்த புகைப்படத்தின் பின்னணி...சுவாரஸ்யமானது. 

ஜெயலலிதா சென்னை வந்தசமயம், மார்டன் யுவதியான அவரது சித்தி வித்யாவதி, அவரது தலைமுடியை சலுானுக்கு அழைத்துச்சென்று பாப் கட்டிங் போல கட் செய்து அழைத்துவந்தார். தன் முடியை கண்ணாடியில் பார்த்து விடிய விடிய அழுதுகொண்டிருந்தார் ஜெயலலிதா. அவரை சமாதானப்படுத்த புவனா சத்யம் என்ற புகைப்படக்காரரை அழைத்துவந்து புகைப்படம் எடுத்தார் வித்யாவதி. தன்னை அழவைத்த அந்த புகைப்படத்தை ஜெயலலிதா அடுத்த 2 மாதங்களில் தன் படுக்கை  அறையில் அழகு பார்த்தார் பெருமிதமாக. ஆம் இந்த புகைப்படத்தை புவனா சத்யம் சந்தியா குடும்பத்திற்கு தெரியாமல் அந்த ஆண்டு புதுடெல்லியில் நடந்த அகில இந்திய புகைப்படக் கண்காட்சிக்கு அதை அனுப்பிவைத்திருந்தார். ஆச்சர்யமாக அந்த படத்திற்குதான் முதல்பரிசான தங்கப்பரிசு கிடைத்திருந்தது. முதன்முறையாக தன் அழகு பற்றி ஜெயலலிதா பெருமைப்பட்ட தருணம் அதுதான். அந்த புகைப்படத்தை சோபன்பாபுவிடம் காட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்தார் ஜெயலலிதா. 

1979 ஆம் ஆண்டு 'ஸ்டார் அண்ட் ஸ்டைல்' என்ற பிரபல ஆங்கிலப் பத்திரிகையில், கிசுகிசு போல ஜெயலலிதா - சோபன் பாபு நட்பு குறித்த ஒரு செய்தி வெளியானது. கிசுகிசுவை உறுதிப்படுத்தும் வகையில், ஜெயலலிதா அந்தப் பத்திரிகைக்கு  ஒரு கடிதமும் எழுதினார். அதுதான் ஜெயலலிதா!

சோபன்பாபு

கடிதத்தில், 'உங்கள் நிருபர் சரியாக குழம்பியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். திரு சோபன்பாபுவுடன் நான் கடந்த 7 வருடங்களாக கோயிங் ஸ்டடி. அவர் எளிமையான பண்பான மனிதர் என்பதால், இந்த நட்பு என் ஆயுள்வரை நீடிக்கவேண்டும் என்பதே என் விருப்பம். அவர் ஏற்கெனவே மணமானவர் என்பதால் தற்சயம் என்னை மணக்கவியலாதவராக இருக்கிறார். அதனால் என் இறுதிக்காலம் வரை ஜெயலலிதா ஜெயராம் என்றே கழிக்கவிரும்புகிறேன். சோபன் பாபுவின் நட்பை நான் என்றைக்கும் மூடி மறைத்தது கிடையாது. தென்னிந்திய திரையுலகில் பலருக்கும் இது தெரியும். நடிகை என்ற இமேஜையோ மீண்டும் திரையுலகப்பிரவேசம் குறித்த எண்ணமும் இல்லாததால், இதுபற்றி நான் அலட்டிக்கொண்டு எதையும் மூடி மறைக்கவேண்டிய அவசியமில்லை' எனக்  காரசாரமாகப் போட்டுடைத்தார் தன் வாழ்க்கையை.

தமிழ் வார இதழ் ஒன்று இந்தக் கடிதத்தின் தமிழாக்கத்தை வெளியிட்டது. வழக்கமான கோபத்துடன் அதன் நிருபரை வரவழைத்த ஜெயலலிதா இன்னும் விரிவாக சோபன்பாபுவுடனான தன் நட்பு குறித்து பேட்டியளித்தார். அதில், “மாலைபோட்டு தாலி கட்டினால்தான் கணவன்-மனைவி என்ற உறவா? எந்தக் கன்னிப்பெண்ணும்  திட்டமிட்டு ஏற்கெனவே திருமணமான ஒருவரை காதலிப்பதில்லை. தனக்கென ஒருவர் வேண்டும். அவர் தனக்கானவராக மட்டும் இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள். நானும் அப்படித்தான் கனவு கண்டேன். ஆனால், நான் சோபன்பாபுவை சந்தித்தபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இது திட்டமிட்டு செய்த காரியமல்ல.  அவரையும் அதற்குப் பொறுப்பாக்க முடியாது. தவிர, நான் அவரைச் சந்தித்தபோதே அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது. அதேசமயம் 'மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உங்களை மணக்கலாமே' என பலர் என்னிடம் கேட்கின்றனர். அது தவறு.  ஒரு குற்றமும் செய்யாத அவரை ஏன் நிராகரிக்கவேண்டும்? அவர் ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாதவர். தவிர அவருக்கு 3 பெண்களும் ஒரு பையனும் உள்ளார்கள். அவர்கள் வாழ்க்கைக்கு என்னால் ஒரு பாதகமும் வந்துவிடக்கூடாது என்றே இதுவரை எங்கள் உறவைப்பற்றிப் பேசாமல் இருந்தேன்” என பேட்டியளித்திருந்தார். 

ஜெயலலிதாதமிழ்கூறும் நல்லுலகுக்கு ஜெயலலிதா - சோபன்பாபு நட்பு குறித்து இதன்பிறகே தெரியவந்தது. ஆனால், ஜெயலலிதாவின்  சில துடுக்குத்தனமான செயல்களினால் சில வருடங்களில் சோபன்பாபுவுடனான அவரது நட்பு முறிந்தது என்றார்கள். இந்த முறிவுக்குப் பின்னணியில், அன்று  சர்வ வல்லமை படைத்த நடிகர் ஒருவர் இருந்தார் என்பார்கள். இதன்பிறகு சோபன்பாபு - ஜெயலலிதா நட்பு குறித்து எதுவும் அலசப்படவில்லை. 

பின்னாளில் ஜெயலலிதா  1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மூலமே அரசியலுக்கு வந்தார்.  சத்துணவுத்திட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர், ராஜ்ய சபை எம்.பி... என  அரசியலில் வளர்ச்சியடையத் தொடங்கிய பின் சோபன்பாபு அவர் நினைவிலிருந்து முற்றிலும் மங்கிப்போனார். மறந்தும் எந்தக்காலத்திலும் தன் பழைய வாழ்க்கையைப் பற்றி அவர் மூச்சு விடவில்லை. அரசியல் அந்தஸ்துக்காக அவர் அதை மறக்கவே நினைத்தார். 

ஆனால், பின்னாளில் ஜெயலலிதா தீவிர அரசியலுக்கு வந்தபின் அது பெரும் சிக்கலை உருவாக்கியது. 1989 ஆம் ஆண்டு முரசொலி பத்திரிகை 4 பக்கத்துக்கு ஜெயலலிதாவும் சோபன்பாபுவும் நெருக்கமாக  இணைந்து காட்சியளிக்கும் படங்களை வெளியிட்டது. இந்த அந்தரங்கப்படங்களால், ஜெயலலிதா கொஞ்சம் ஆடித்தான் போனார். ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபின் அவரது இந்தப் பழைய அந்தரங்கம் அதிகம் அலசப்படவில்லை. ஆச்சர்யம் என்னவென்றால், சோபன்பாபு தன் இறுதிக்காலத்தில் ஜெயலலிதாவின் இல்லத்துக்கு வெகு அருகிலேயே வசித்து மறைந்தார். கூப்பிடும் தூரம்தான். ஆனால், சாதாரண நட்பைக்கூட அவருடன் தொடரவில்லை ஜெயலலிதா!

ஜெயலலிதா மறைந்தபின் இப்போது மீண்டும் அரங்கத்துக்கு வந்திருக்கிறது  அவரது அந்தரங்கம்.  தன் அரசியல் வாழ்வில் 'துணிச்சல்காரர்' என்றும் சர்வ வல்லமை கொண்ட 'இரும்பு மனுஷி' எனவும்  பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு பெண்மணி ஜெயலலிதா! அவரது வாழ்வின்  வெளிப்படையான வனவாசத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு  அவரது 'வாரிசுகள்' கிளர்ந்துவருவது, உண்மையில் ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு கொஞ்சம் அவமானமாகத்தான் இருக்கும். 


டிரெண்டிங் @ விகடன்