சூறைக்காற்றுடன் கூடிய கனமழை: நெல்லையில் வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகள் சோகம்!

நெல்லை மாவட்டத்தின் சூறைக் காற்றுடன்கூடிய கனமழை பெய்தது. இதில் சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கரில் பயிடப்பட்டு இருந்த 20,000-க்கும் அதிகமான வாழைகள் சாயந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வாழைகள் சேதம்

குமரிக் கடலில் ஒகி புயல் மையம் கொண்டிருப்பதால் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன்கூடிய மழை பெய்வதால் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளிலும் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்துடன், மின்கம்பங்களும் சாய்ந்ததால், பல இடங்களில் மின்சாரம் இல்லாத நிலை உள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆபத்தான கட்டடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் உவரி மற்றும் முக்கூடல் பகுதிகளில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடனா அணை, குண்டாறு அணை ஆகியவை நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில், சேர்வலாறு அணையிலிருந்து 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால், தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 

மழையால் சேதம்

நெல்லை: மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாகச் சேரன்மகாதேவி அருகே சக்திகுளம், தெற்கு அரியநாயகிபுரம் பகுதியில் சுமார் 10,000 வாழை மரங்கள் சேதமடைந்தன. காய்கள் பெரியதாக மாறக்கூடிய பருவத்தில் வாழைகள் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகளுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. விளாகம் பகுதியில் 5,000 வாழை மங்கள் சாய்ந்து சேதமடைந்தன. 

நெல்லை டவுன் அருகே உள்ள பாடகசாலை பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த 5,000 வாழை மரங்கள் காற்றில் சாய்ந்தன. திடீரென வீசிய புயல் காற்றில் வாழை மரங்கள் சேதமடைந்த சம்பவத்தால், விவசாயிகள் பெரும் சோகம் அடைந்துள்ளனர். தங்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!