ஜெயக்குமாரும் மதுசூதனனும் ஏரி நண்டுகள்! கலகலத்த புகழேந்தி

தினகரன் அணியைச் சேர்ந்த பெங்களூரு மாநிலச் செயலாளர் புகழேந்தி முதல்வரைப் பற்றி அவதூறாக நோட்டீஸ் அடித்த வழக்கில் ஆஜராவதற்காக சேலம் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, 'வரும் ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் மாபெரும் வெற்றி பெறுவார். அவருடைய வெற்றி பிரகாசமாக இருக்கிறது. ஏற்கெனவே ஆர்.கே.நகர் மக்கள் தினகரனின் தொப்பி சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார்கள்.

இடையில் தேர்தல் நின்று போனதால் வெற்றி தள்ளிப் போயிருக்கிறது. அதனால் மக்கள் தினகரனுக்கு வாக்களிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். தினகரன் அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு சேவை செய்து வருகிறார். மக்கள் துரோகிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். நல்லவர்களுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள். தினகரனுக்கு இறைவன் கொடுத்த கபடமில்லா முகமும் சிரித்த பேச்சாற்றலாலும் மக்கள் தினகரனை நேசிக்கிறார்கள்.

அவருக்குதான் வாக்களிப்பார்கள். திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆருக்கு வெற்றி கிடைத்ததைப்போல தினகரனும் வெற்றி பெறுவார். தேர்தல் ஆணையத்தில் நீதி கிடைக்கும் என நம்பினோம். ஆனால், நீதி கிடைக்கவில்லை. வாழ்நாளில் இதுபோன்ற தேர்தல் ஆணையரை பார்த்ததில்லை. தேர்தல் முடிவு அறிவிப்பதற்கு 3 மணி நேரத்துக்கு முன்னதாகப் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறோம்.

நிச்சயம் உச்ச நீதிமன்றத்தால் இரட்டை இலைக்கு ஸ்டே கொடுக்கும். இரட்டை இலை இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஜெயக்குமாரும் மதுசூதனனும் சிறந்த ஏரி நண்டுகள். நண்டுகள் ஒன்றை ஒன்று காலை வாரி கீழே இழுப்பதைப்போல இழுத்து விடுவார்கள். இருவருமே முன்னேற மாட்டார்கள். இவர்களுக்குப் போட்டி இவர்கள் மட்டுமே. அதனால் தினகரன் அபார வெற்றி பெருவார். மதுசூதனன் மோசமான தோல்வியைச் சந்திப்பார். அதற்கு காரணமாக ஜெயக்குமார் இருப்பார். நவநீத கிருஷ்ணனும் இன்னும் பிற பாராளுமன்ற உறுப்பினர்களும் தினகரனின் ஆட்கள். எடப்பாடி பழனிசாமியோடு இருந்து தேர்தல் வியூகங்களை எங்களுக்கு சொல்லுவார்கள்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!