ஐம்பொன் சிலைகள் கடத்தல்: அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் 6 ஐம்பொன் சிலைகளைத் திருடிய வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலரைச் சிலைகள் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். 

சிறையில் அடைப்பு

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1,000 ஆண்டு பழைமை வாயந்த கோயிலைச் சுற்றியுள்ள 73 கிராமங்களிலிருந்து பழைமையான ஐம்பொன் சிலைகள், வெங்கலச் சிலைகள் ஆகியவற்றைப் பாதுகாப்புக்காகப் பசுபதீஸ்வர் கோயிலில் வைத்துப் பாதுகாத்து வந்தனர். 
திருவிழா காலங்களில் மட்டும் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கொண்டுவந்து வைக்கப்படுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு கீழமணக்குடி விஸ்வநாதஸ்வாமி விநாயகர், புஷ்பகரணி, வள்ளி தெய்வானை, சந்திரசேகர அம்மன் சிலைகளும் ஸ்ரீரெங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோயிலுக்குரிய விநாயகர் சிலை என மொத்த 6 சிலைகள் காணாமல் போனது தெரியவந்தது. சிலைகள் மாயமானது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பணியாளர்கள் என 10 பேர் மீது சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

இந்நிலையில், நேற்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.எஸ்.பி.டி.குமார் தலைமையிலான போலீஸார், இணை ஆணையர் கஜேந்திரன், காமராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து கும்பகோணத்தில் உள்ள நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். டிச.7-ம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!