வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (30/11/2017)

கடைசி தொடர்பு:22:00 (30/11/2017)

நெல்லையில் சாலையில் கிடந்த மரத்தை அகற்ற உதவியவர் பலியான பரிதாபம்!

கனமழை காரணமாக நெல்லையில் சாலையின் நடுவில் விழுந்து கிடந்த மரத்தை அகற்ற உதவிய நபர் மீது மரம் விழுந்ததில் உயிரிழந்த பரிதாபம் நடந்தது. அவரைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த பரிதாபம்

குமரிக் கடலில் மையம் கொண்ட புயலின் தாக்கம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. மழையின்போது சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து கிடக்கின்றன. மின் கம்பங்களும் சூறாவளிக் காற்றுக்குத் தப்பவில்லை. இந்த நிலையில், தென்காசியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் பேருந்து வந்துள்ளது. அப்போது ஆழ்வார்குறிச்சி-பொட்டல்புதூர் மெயின்ரோட்டில் இசக்கியம்மன் கோயில் அருகே ஒரு மரம் விழுந்து கிடந்துள்ளது.

அதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் அந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாகப் பஸ்ஸில் வந்த சிலரும் உதவி செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத வகையில் ஒரு பயணியின் மீது மரக்கிளை விழுந்துள்ளது. அதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவர் யார் என்பது தெரியவில்லை. அவரது பையில் டிக்கெட் மற்றும் பணம் மட்டுமே இருந்ததால் அவரைப் பற்றிய விவரம் கிடைக்கவில்லை. 

உதவி செய்ய வந்த இடத்தில் உயிரிழந்த அந்த நபர் குறித்து அம்பாசமுத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டு உள்ளனர். அவரைப் பற்றிய விவரம் தெரிந்தவர்கள் அம்பாசமுத்திரம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தை அணுகி தகவல் தெரிவிக்கலாம் எனக் காவல்துறை அறிவித்துள்ளது.