வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (30/11/2017)

கடைசி தொடர்பு:22:20 (30/11/2017)

சவுதி கடலில் மூழ்கிய பாம்பன் மீனவர் மாயம்! ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணி

சவுதி கடலில் கப்பல் மோதிய விபத்தில் பாம்பனைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மாயமானார். ஹெலிகாப்டர் மூலம் அவரைத்  தேடும் பணியில் சவுதி கடற்படை ஈடுபட்டுள்ளது.

 

கடந்த 6 மாதத்துக்கு முன் பாம்பனைச் சேர்ந்த பிரைன் இக்னேஷியஸ் லொயோலா மற்றும் 4 மீனவர்கள் சவுதிக்கு மீன்பிடிக்கக் கூலித் தொழிலாளர்களாக வேலைக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், சவுதி கடற்பகுதியில் இன்று மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது அந்தக் கடல் பகுதியில் சென்ற சரக்கு கப்பல் மீனவர்களின் விசைப்படகு மீது மோதியது. இதில் மீன்பிடி விசைப்படகு கடலில் கவிழ்ந்துள்ளது. இதனால், படகில் இருந்த 5 மீனவர்களும் கடலில் மூழ்கியுள்ளனர். உடனடியாக முடுக்கிவிடப்பட்ட மீட்புப் பணியில், கடலில் மூழ்கிய 5 மீனவர்களில் 4 பேர் மட்டுமே, மீட்கப்பட்ட நிலையில் மீனவர் பிரைன் இக்னேஷியஸ் லொயோலாவை மட்டும் மீட்க முடியவில்லை. கடலில் விழுந்த அவர் என்ன ஆனார் எனத் தெரியவில்லை.

இதையடுத்து, மாயமான மீனவர் லொயோலாவை சக மீனவர்கள் மற்றும் சவுதி கடற்படை வீரர்கள் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தேடி வருகின்றனர். கடலில் விழுந்த மீனவர் லொயோலாவை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுப்பதுடன், அவரை இந்தியாவுக்கு அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாயமான மீனவரின் குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.