”மீன்கள் இறந்தது இதனால்தான்..!” - காரணம் சொல்லும் சென்னை மீனவர்கள்

மீன்கள்

சென்னை அடையாறு அருகே உள்ள பட்டினம்பாக்கம் ஊரூர் குப்பம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை மாலை வேளையில் 'மடவை' மற்றும் 'ஜிலேபி' வகை மீன்கள் உயிர் துடித்து கரை ஒதுங்கின. இதற்கான காரணம் மற்றும் இதற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி அறிந்துகொள்ள அப்பகுதி மீனவர்களைச் சந்தித்தோம்.

அப்போது பேசிய மீனவர்கள், 'கடந்த திங்கட்கிழமை மாலை மீன் பிடிக்கச் சென்ற போது, கரையில் 'மடவை' மற்றும் 'ஜிலேபி' மீன்கள் உயிர் துடித்தவாறு கரையில் கிடந்தன. சிறுது நேரத்தில் அந்த எண்ணிக்கை ஆயிரக்கணக்காக உயர்ந்தது' என்றனர். இதனை அறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து அப்பகுதியின் நீர், மணல் போன்றவற்றை ஆய்வுக்கூடத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இதுபற்றி கூறுகையில், 'இவ்வகையான மீன்கள் பெரும்பாலும் உப்பு நீரிலே உயிர் வாழும். ஆனால், தற்போது இங்குள்ள நீர் சுத்தமாக இருப்பதால் அம்மீன்கள் உயிர் இழந்துள்ளன' என்று கூறினார்.

ஆனால், அங்குள்ள மீனவர்கள் ”மீன்களின் இறப்புக்கு அதுவும் ஒரு காரணம்; ஆனால் அதுமட்டுமே காரணம் இல்லை” என்கிறார்கள். இப்பகுதிக்கு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் புற்றுநோய் மருத்துவமனையின் கழிவுகள் அதிக அளவில் இப்பகுதி நீரில் கலப்பதால்தான் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு போதிய வசதி இல்லாததால், கழிவுகளை அப்பகுதி நீரிலேயே கலக்கச்  செய்கின்றனர். 

”இதை உரிய அதிகாரிகளிடம் அறிவித்தீர்களா? என்ற கேள்விக்கு, 'ஏற்கெனவே அரசு அறிவிக்கப்பட்ட மானியம் மற்றும் நிவாரண உதவிகள் நிலுவையில் இருப்பதால், அரசிடம் இதை முறையீடு செய்ய எங்களுக்குத் தயக்கமாக உள்ளது' என்று பதில் அளித்தனர்.

மீன்கள் அதிகம் உற்பத்தியாகி வியாபாரம் நடைபெறும் இப்பருவத்தில் இதுபோன்று நிகழ்வுகளால் மீன் வியாபாரம் பெரிதும் பாதிப்படைகிறது. பொது மக்கள் மீன்களை வாங்க அச்சப்படுகின்றனர். 

கடல்நீர் கரைப் பகுதி வரை ஏறி வந்தால் இதுபோல சம்பவங்களைத் தவிர்க்கலாம். இதற்காக ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மணலை அப்புறப்படுத்தும் பணியையும் அவ்வப்போது அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால், தற்போது இப்பணி சில நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இப்பணியை முறையாக மேற்கொண்டு வந்தால் மேலும் இதுபோன்ற சம்பவத்தை தவிர்க்கலாம் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

அரசின் தலையீட்டை பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பதாகக் கூறிய அம்மீனவர்கள், 'எங்கள் அன்றாட தொழிலை மேற்கொள்ள தேவையான வலைகள், படகுகள் போன்றவற்றை நாங்கள் தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்குகிறோம். இதை அரசே முன்னெடுத்து நடத்தினால் எங்களுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும். அதை எதிர்பார்த்து நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம். மேலும் இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அறங்காவல் ஒன்றை அமைக்கவுள்ளோம். இதன் மூலம் தங்களுக்கு ஏற்ற நலத்திட்டங்களை தாங்களே மேற்கொள்ள உள்ளோம்' என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!