வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (30/11/2017)

கடைசி தொடர்பு:23:00 (30/11/2017)

நெல்லையில் வெள்ளத்தில் இருவர் அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல்..! பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

நெல்லை மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

மழை சூழ்ந்த மருத்துவமனை

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் நீர் நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் நிரம்பிக் கிடக்கிறது. ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின் வயர்கள் அறுந்து கிடப்பதால் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. செல்போன் டவர்களும் செயலிழந்து கிடப்பதால் பல இடங்களில் செல்போன் சேவை முடங்கிக் கிடக்கிறது. 

நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் அணைகளிலிருந்து அதிகமான தண்ணீர் திறக்கப்படுகிறது. அதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆற்றங்கரையோரம் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முக்கூடல் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் அருகிலுள்ள 100 க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்தவர்கள் முக்கூடல் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

பணகுடி பகுதியில் பேருந்து நிலையம், மருத்துவமனை ஆகியவை தண்ணீர் சூழ்ந்து கிடக்கின்றன. அனுமன் நதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் பேருந்துகள் ஊருக்குள் வரமுடியவில்லை. அதனால் பேருந்துகள் அனைத்தும் நான்குவழிச் சாலை மூலமாகவே இயக்கப்பட்டன. அத்துடன், ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் மழை நீர் புகுந்தது. அதனால் அங்கிருந்த நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலமாக வெளியேற்றப்பட்டு வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே, அனுமன் நதி வழியாக வந்த இருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. அவர்களை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.  

கனமழை விடுமுறை

தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். ஏற்கெனவே இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 1-ம் தேதியும் விடுமுறை விடப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக துணைவேந்தர் பாஸ்கர் அறிவித்துள்ளார்.