கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களுக்கு ஷிப்ட் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு!

கோவை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி வைக்கப்பட்டுள்ள பேனர்களுக்கு ஷிப்ட் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பேனர்

கோவையில், வருகின்ற டிசம்பர் 3-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு, கோவை அவிநாசி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட சாலைகளில் ஏராளமான இடங்களில் பேனர் மற்றும் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கோவை அரசு மருத்துவக் கல்லூரி அருகே வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுமீது மோதி, விபத்து ஏற்பட்டு ரகுபதி என்ற மென்பொறியாளர் உயிரிழந்தார்.

இந்த மரணம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அனுமதியின்றி மற்றும் மக்களுக்குப் பாதிப்புத் தரும் வகையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, பேனர்களை அகற்றவேண்டும் என சமூக ஆர்வலர்கள் ஒருபக்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரகுவின் மரணத்திலிருந்து மீளமுடியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

ஆனால், இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், அந்த பேனர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. அதன்படி, முக்கிய சிக்னல்கள் சந்திப்புகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தினசரி காலை, மாலை என இரண்டு ஷிப்ட்களின் அடிப்படையில், போலீஸார் அந்த பேனர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். எந்தச் சூழ்நிலையிலும், பேனர்களுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்பதுதான் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு. இவர்களைக் கண்காணிக்க போலீஸ் ஒருவர் வருவார். அவர் கொண்டுவரும் நோட்டில் பணியில் உள்ள போலீஸ் கையெழுத்து போடவேண்டும். இப்படிப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்குக் கெடுபிடிகளும் அதிகம்.

பேனர்


குறிப்பாக, ரகுவின் மரணத்துக்குப் பிறகு பேனர், கட் அவுட்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்கே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கோவையில், கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. மழை, கொசுத் தொல்லை என மிகவும் கடினமான சூழ்நிலையில் பணிசெய்து வருவதாக போலீஸார் வேதனை தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!