அ.தி.மு.க.வுக்குப் பாடம் புகட்ட ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க-வுக்கு ஆதரவு! - ஜி.ராமகிருஷ்ணன்

அ.தி.மு.க-வுக்குப் பாடம் புகட்டுவதற்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தி.மு.க-வை ஆதரிப்பதாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அடுத்த மாதம், 21-ம் தேதி நடக்கவுள்ளது. தி.மு.க சார்பில் மருதுகணேஷ், அ.தி.மு.க சார்பில் மதுசூதனன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே, தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துவிட்டன. இந்நிலையில், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் கோவையில் இன்று நடந்தது. இதில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், சவுந்தரராஜன், கே.வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பிறகு ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பி.ஜே.பி-யின் கைப்பாவையாக, அ.தி.மு.க மாறிவிட்டது. ஜி.எஸ்.டி, பணமதிப்பு நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசுக்கு, தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவிக்காமல் ஆதரவு தெரிவித்துள்ளது. பலவீனமான மாநில அரசின் மூலம், தமிழகத்தில் கால் பதிக்க பி.ஜே.பி முயற்சித்து வருகிறது. இதனால், மாநில அரசின் உரிமைகளும் தொடர்ந்து பறிபோய்க் கொண்டிருக்கின்றன. எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பி.ஜே.பி மற்றும் அ.தி.மு.க-வுக்குப் பாடம் புகட்டுவதென்று மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். அதன்படி, தி.மு.க வேட்பாளர் மருது கணேஷை, ஆர்.கே.நகர் தேர்தலில் எங்களின் தனி மேடையிலிருந்து ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!