வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (01/12/2017)

கடைசி தொடர்பு:01:00 (01/12/2017)

''டாஸ்மாக் 'பார்'' மூடப்படுகிறது..!'' அதிரடி உத்தரவு போட்டது தமிழக அரசு

மூன்று சதவிகித வரிகட்டாத டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என்று ஒவ்வொரு டாஸ்மாக் கடை நிர்வாகத்துக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகம் அறிவுரை வழங்கி உள்ளது. எனவே, இன்றிலிருந்து டாஸ்மாக் பார்கள் மூடப்படுவதால்  மதுபிரியர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டாஸ்மாக் பார்

2018-ம் ஆண்டுக்கான டாஸ்மாக் கடைகளில் பார் நடத்துவதற்கான ஒப்பந்த அறிவிப்பை சமீபத்தில் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. இது  நடப்பு ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி வரைக்கான உரிம ஒப்பந்தம் ஆகும். இந்த அறிவிப்பில், “டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரித்து இருக்கிறது. இதனால், டாஸ்மாக் 'பார்'களை எடுத்து நடத்தும் உரிமையாளர்களுக்கும் வருவாய் அதிகரித்துள்ளது. எனவே, ஏற்கெனவே இருந்த 2.5 சதவிகித வரியை மூன்று சதவிகித வரி என்று  உயர்த்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வரி உயர்வை, டாஸ்மாக் 'பார்'களை டெண்டர் எடுத்து நடத்தும் உரிமையாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். புதிய டெண்டரை எடுக்காமல் அதை பார் உரிமையாளர்கள் புறக்கணித்தனர். மேலும், பார் உரிமையாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வரி அதிகரிப்பைத் தடுக்கச்சொல்லி வழக்குத் தொடுத்தனர். அதை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துது.

இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகம், டாஸ்மாக் கடைகளுக்கு நவம்பர் 30-ம் தேதி அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'மதுபான சில்லறை விற்பனைக் கூடங்களுடன் (டாஸ்மாக் கடைகள்) இணைந்த மதுக்கூடங்களின் (பார்களின்) ஒப்பந்த உரிமம் 30.11.17 அன்றுடன் முடிவடைந்த நிலையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் அறிவுரைப்படி, பார் அனுமதியை மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டித்துள்ளது. எனவே, இந்த நான்கு நாட்களுக்கான உரிமைத் தொகையை வங்கி வரைவோலையாக 1.12.17 முற்பகல் 12 மணிக்குள் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். மேற்படி, வங்கி வரைவோலை செலுத்தாத மதுக்கூடங்கள் 1.12.17 முதல் மூடப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மதுப்பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த பிரச்னைக்கு ஒர் முடிவு கட்ட, மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணியை இன்று காலையில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். அதற்கான அனுமதியை அமைச்சர் தங்கமணியிடம் பார் உரிமையாளர்கள் கேட்டுள்ளனர். இந்த சந்திப்பு சுமுகமாக நடந்தால் டாஸ்மாக் பார்கள் தொடர்ந்து இயங்கும். இல்லையென்றால் மூடப்படும்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க