திருமணத்துக்கு மறுத்த பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டு சிறை!

திருமணத்துக்கு மறுத்த பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு திருப்பூர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள பனப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் முத்தலிப். 38 வயதான இவர், கடந்த 2015-ம் ஆண்டு அதே பகுதியில் செயல்பட்டு வந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது அதே நிறுவனத்தில் தன்னுடன் வேலை பார்த்து வந்த 20 வயதுடைய பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்ள அவர் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்ததால், அப்துல் முத்தலிப் அந்தப் பெண்ணின் முகம் உட்பட உடலின் பல்வேறு பகுதிகளில் கத்தியால் குத்திவிட்டு தப்பியிருக்கிறார். பின்னர் அக்கம்பக்கத்தில் இருந்த நபர்கள் அந்தப் பெண்ணை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து காப்பாற்றினர். 


இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அப்துல் முத்தலிப்மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்திருந்தது பல்லடம் காவல்துறை. அந்த சம்பவம் தொடர்பான வழக்கு, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், இன்று அவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதி அறிவித்தார். கொலை முயற்சியில் ஈடுபட்ட காரணத்துக்காக அப்துல் முத்தலிப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!