வெளியிடப்பட்ட நேரம்: 01:42 (01/12/2017)

கடைசி தொடர்பு:09:03 (01/12/2017)

''தலைகுனிவு; அவமானம் - இரட்டைக்குழல் துப்பாக்கி..!'' போட்டுத்தாக்கும் மு.க.ஸ்டாலின்

''ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் மதிக்காமல், மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், ஆமாம் சாமி போடும் அடிமைக்கூட்டமாக இருக்கிறது எடப்பாடி அரசு. தமிழர்களுக்குத் தலைகுனிவையும் அவமானத்தையும் தேடித்தருவது ஒன்றே ‘இரட்டைக் குழல் துப்பாக்கி’களான இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தரப்பின் ஒரே லட்சியமாக உள்ளது'' என்று தொண்டர்களுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

ஸ்டாலின்


இதுகுறித்து மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ''இந்தியாவுக்கே வெகுமானமாகத் திகழும் மாநில சுயாட்சிக் கொள்கையைத் தந்த தமிழ்நாட்டுக்கு அவமானமாக தலைகுனிவாக ஓர் அரசு தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குதிரை பேரத்தால் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் எடப்பாடி அரசு, தனது அதிகாரத்தை மொத்தமாக டெல்லியிடம் அடமானம் வைத்துவிட்டு, தமிழ்நாட்டின் உரிமைகளை ஒவ்வொன்றாக இழந்துகொண்டிருக்கிறது. மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தன் கைப்பிடியில் உள்ள கயிற்றை இழுப்பதற்கேற்ப ஆடும் பொம்மைகளாக இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் என இரட்டைத் தலை கொண்ட ஆட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்களும் ஆடும் நிலையைக் கண்டு தமிழர்கள் வெட்கித் தலைகுனிகிறார்கள்.

ஜெயலலிதா வழியில் செயல்படுகிறோம் என்று சொல்லும் எடப்பாடி அரசு, பிறமொழி பேசும் மாணவர்களுக்குச் சலுகை என்ற பெயரில் தமிழ்நாட்டில் தமிழைப் படிப்பதற்கு விலக்கு அளிக்கும் அரசாணையை பிறப்பித்துள்ளது. இதன் மூலமாகத் தமிழ்மொழி கற்றல் சட்டம் சிதைக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவிலும் கர்நாடகத்திலும் அந்தந்த மாநில மொழிகளைக் கட்டாயம் படித்தாகவேண்டும் என அங்குள்ள அரசுகள் இப்போது சட்டம் இயற்றுகிற நிலையில், தமிழகத்தில் தி.மு.க அரசு தமிழ்மொழியை எதிர்காலத் தலைமுறையினர் கற்று சிறக்க வகுக்கப்பட்ட சட்டத்தை, எடப்பாடி அரசு சீரழித்துள்ளது.

ஒருபுறம், தமிழகத்தில் இந்தி மொழியை எப்படியாவது திணித்துவிடவேண்டும் என்று வரிந்துகட்டும் மத்திய அரசுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டு, மறுபுறம், தமிழகத்தில் தமிழை அழிக்கும் வேலையை எடப்பாடி அரசு மேற்கொண்டுள்ளது. தாய்மொழிக் கல்வியே சிந்தனையை வளர்க்கும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு, உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் தாய்மொழியைக் கற்றுத் தரும் நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க அரசின் திட்டமிட்ட தமிழ் மொழிப் புறக்கணிப்பால், மாணவர்களின் சிந்தனை வளம் சிதைந்து, தன்னம்பிக்கை குறைந்து, சின்னச் சின்ன பிரச்னைகளுக்குக்கூட மனம் உடைந்து தற்கொலை செய்துகொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. கல்வித்துறையை மேம்படுத்தாமல் சீரழித்துவரும் எடப்பாடி அரசின் போக்கினால் மரணங்களும் அவமானங்களும் தொடர்கின்றன.

ஓபிஎஸ்-இபிஎஸ்

நாட்டின் எதிர்காலச் சிற்பிகளான மாணவர்களின் மனதில் தன்னம்பிக்கையைச் சிதைத்து, தாய்மொழி வழியிலான சிந்தனை ஆற்றலைத் தடுத்து, அடிமைகளாக்கும் வகையில் தமிழ்நாட்டில் கல்வித்துறை என்பது பள்ளிக்கூடங்கள் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை சீரழிந்து வருகிறது. இதுகுறித்து அக்கறை செலுத்தி, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு முழுமையாகக் கொண்டு வரவேண்டிய உரிமைக் குரலை எழுப்ப வேண்டிய அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களோ இந்திய துணைக்கண்டத்தின் அரசியல் சாசனம் வழங்கியுள்ள மாநில உரிமைகளையும் மத்திய அரசிடம் மண்டியிட்டு, தாரை வார்த்து தரையைக் கவ்விக்கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அரசாங்கம் நடைபெறும் நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்பட்டு, அதிகாரிகளை அழைத்து நிர்வாகம்குறித்து ஆலோசனை நடத்துகிறார். இத்தகைய ஆலோசனைகள் தொடரும் என்கிறார். எங்களின் அதிகாரத்தில் நீங்கள் எப்படி தலையிடலாம் எனக் கேட்கவேண்டிய முதலமைச்சரும் அமைச்சர்களும் ஆளுநருக்கு ஆலவட்டம் சுற்றுகிறார்கள். அதன் விளைவாக, தமிழக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளராக ஆர்.ராஜகோபால் ஐ.ஏ.எஸ்  நியமிக்கப்பட்டுள்ளார்.

பன்வாரிலால் புரோகித்

ஆர்.ராஜகோபால் ஐ.ஏ.எஸ், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகத்தின் முன்னாள் ஆலோசகராக இருந்தவர். அவரை மாநில அரசுப் பணிக்குத் திரும்பச் செய்திருப்பதன் உள்நோக்கத்தை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதுடன், மாநில அரசின் அதிகாரிகளைக் கடந்து, ஆளுநர் மாளிகையான ராஜ்பவனை இன்னொரு தலைமைச் செயலகமாக உருவாக்கி, இரட்டையாட்சி நடத்தும் நோக்கமே இந்த நியமனத்தில் வெளிப்படுகிறது. நாளடைவில் இரட்டையாட்சி என்பது ஆளுநர் மாளிகையின் ஒற்றையாட்சியாக மாற்றப்படும் திட்டம் உள்ளதோ என்ற அச்சமும் ஐயமும் ஏற்படுகிறது.

ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் மதிக்காமல், மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், ஆமாம் சாமி போடும் அடிமைக்கூட்டமாக இருக்கிறது எடப்பாடி அரசு. தமிழ்நாட்டின் நலன்களையும் உரிமைகளையும் டெல்லியிடம் அடமானம் வைத்து தமிழர்களுக்குத் தலைகுனிவையும் அவமானத்தையும் தேடித்தருவது ஒன்றே ‘இரட்டைக் குழல் துப்பாக்கி’களான இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தரப்பின் ஒரே லட்சியமாக உள்ளது. அவமானத்தைத் துடைத்து, அடமானம் வைக்கப்பட்டுள்ள உரிமைகளை மீட்டு, ஜனநாயகம் காக்கும் பணியில் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டு, தலைவர் கலைஞரால் வழிநடத்தப்படும் தி.மு.க முன்னிற்க வேண்டும்; ஆயத்தமாவோம். அடிமை அரசிடமிருந்து தமிழ்நாட்டின் மானம் காப்போம்'' என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க