மோசடி செய்த அதிகாரிமீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? விவசாயிகள் கேள்வி

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் பயிர்க்காப்பீடு வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் இதுதொடர்பான கூட்டுறவு வங்கி அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாவட்ட ஆட்சியர் லதாவிடம் மனு அளித்திருக்கிறார்கள் அக்கிராம மக்கள்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள சாக்கூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் வழங்கும் திட்டத்திலும் பயிர்க்காப்பீடு வழங்குவதிலும் முறைகேடு நடந்திருக்கிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவு, முதன்மைச்செயலாளர், கூட்டுறவு இணைப்பதிவாளர், மாவட்ட ஆட்சியர் என புகார் கடிதம் அனுப்பி  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சார்பில் மீண்டும் ஒரு மனு கொடுத்திருக்கிறார் சமூக ஆர்வலரான மனோகரன்.

அவர் பேசும்போது, ”2015-ம் ஆண்டு பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தில் வரிசை எண் 303-லிருந்து 343 வரை 25 லட்சம் ரூபாய் போலியான ஆட்கள் கடன் வாங்கியிருக்கிறார்கள். 2012-2013-ம் ஆண்டு பயிர்க்காப்பீடு வழங்கியதில் கூட்டுறவு சங்கக் கட்டடம் கட்டுவதற்காக போலி ரசீதுகள் மூலம் பணம் வசூல்செய்து மோசடி செய்தார் அப்போதைய வங்கிச் செயலாளர்.

2013-2014-ம் ஆண்டு 2,500 பேருக்கு 1 கோடியே 40 லட்சம் ரூபாய் பயிர்க்கடன் இழப்பீடு வழங்கியதில் போலியாக ஆவணங்கள் தயார் செய்து, அப்போது இருந்த பீல்டு மேனேஜர் குருசேகர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கிறார். உதாரணத்துக்கு சபிதா என்கிற பெண்மணிக்கு 52 ஏக்கர் நிலத்துக்கு காப்பீடு செய்து 2 லட்சத்து 27 ஆயிரம் போலியான ஆவணங்கள் தாக்கல்செய்து பணம் கையாடல் செய்திருக்கிறார்கள்.

மேலும், 2016-2017-ம் ஆண்டு விவசாயி ஒருவர் பயிர்க்காப்பீட்டுத் தொகையாக வங்கியில் செலுத்தியது 1,435 ரூபாய். ஆனால், வங்கிச் செயலாளர் தண்டபாணி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் செலுத்தியது அதில் 12 ரூபாய் மட்டுமே. இதனால் விவசாயிகள் தங்களுக்கு நியாயப்படி வர வேண்டிய காப்பீட்டுத் தொகையை  பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இவ்வளவு மோசடி செய்த அதிகாரிமீது நடவடிக்கை எடுக்க கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதுதான் எங்களுக்கு மர்மமாக இருக்கிறது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!