மருத்துவப் பணிக்கு இஷ்டத்துக்கு ஆள் எடுப்பதா? கொதிக்கும் மாணவர்கள்

சமீபத்தில் தமிழக அரசு முதுநிலை மருத்துவப் பணிடங்களை நிரப்பியது. அதில் சீனியாரிட்டி முறையைப் பின்பற்றவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள் மருத்துவக்கல்லூரி மாணவர்கள்.

தமிழ்நாடு முதுநிலை மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில், கடந்த சில தினங்களாக இதற்காக உள்ளிருப்புப் போராட்டம், கண்ணில் கறுப்புத் துணி  அணிந்து போராட்டம் என தொடர்ச்சியாக  தமிழகம் முழுக்க உள்ள மருத்துவக்கல்லூரி வளாகங்களில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

மருத்துவ மாணவர்கள்அவர்களிடம் பேசினோம்,

“வழக்கமாக அரசு மருத்துவத்துறையில் காலியாக  உள்ள  பணிடங்களுக்கு மருத்துப்பணிக்கான தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தித்தான் பணியிடங்கள் நிரப்பப்படும். ஆனால், இப்போது அப்படி நடக்காமல், வெறுமனே நேர்முகத்தேர்வு மட்டும் நடத்தி தமிழகம் முழுவதிலும் இருந்த 700-க்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவ பணியிடங்கள்  பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இதனால், அரசுக் கல்லூரிகளில் மேற்படிப்பு முடித்ததுடன் கிராமப்புறங்களில் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேவையாற்றிவிட்டு, தகுதியின் அடிப்படையில் முதுநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்களான  எங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை.  மாறாக லட்சங்களை செலவு செய்து தனியார் கல்லூரிகளில் பட்டங்களை முடித்துள்ளவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  தமிழக அரசு, நீதிமன்றம் உத்தரவுப்படி, பணியிடங்களை நிரப்பியதாக கூறுகிறது.

தமிழக அரசு இத்தகைய போக்கினை மாற்றிக்கொள்ள வேண்டும், அரசின் இத்தகைய நடவடிக்கையால் இனிவரும் காலங்களில் கிராமப்புறங்களில் சேவையாற்றிட மருத்துவ மாணவர்கள் முன்வரமாட்டார்கள்.

இதற்கு எதிராக சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான முதுகலை மருத்துவ மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். ஏற்கெனவே நீட் தேர்வு உள்ளிட்டவற்றால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெறுமனே நேர்காணல் மூலம் தங்கள் விருப்பப்படி மருத்துவர்களை தேர்ந்தெடுத்து எங்கள் வாழ்க்கையில் அடிக்கலாமா, இதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

இதற்கு எதிராக பல்வேறு கட்டமான போராட்டங்களை நாங்கள் நடத்தி வருகின்றோம். ஆனால், அரசு கண்டுகொள்ளவில்லை. இந்தப் போக்கு நீடித்தால் தொடர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்” என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!