வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (01/12/2017)

கடைசி தொடர்பு:07:58 (01/12/2017)

சுகாதாரம் இல்லாத சுகாதாரத்துறை அமைச்சர் மாவட்டம்!

"சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எங்க மாவட்டத்துக்காரருன்னு சொல்லிக்கவே எங்களுக்கு வெக்கமா இருக்கு. ஊரு முழுக்க குப்பையும் கூளமுமா குவிஞ்சு, நாறிக்கெடக்கு. துப்புரவுப் பணியே நடக்குறது இல்லே.மொத்தத்துல, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்டத்துல சுகாதாரம் கேள்விக்குறியாவும் கேலிக்குரியதாவும் இருக்கு" என்று எடுத்த எடுப்பிலேயே எகிறிக் குதித்தார்கள் புதுக்கோட்டை நகரவாசிகள்.
சமீபகாலமாக புதுகை நகராட்சி அலுவலகத்துக்கு,' எங்கள் தெருவில் குப்பை அள்ளாமக் கிடக்கு.சாக்கடைத் தூர் வாராமல் கிடக்கு' என்று தொடர்ந்து மக்களிடமிருந்து புகார்கள் வந்தவண்ணம் இருக்கிறது. அதைக் கேள்விப்பட்ட நாம் ஒரு நகர்வலம் கிளம்பினோம்.
பழைய நகராட்சி அலுவலகக் கட்டட முகப்பிலேயே, 'தூய்மை புதுகை' என்ற வாசகம் நம்மை பளிச்சென்று வரவேற்றது. பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் 'தமிழ் வாழ்க' என்ற வாசகங்கள்தான் இடம் பெற்றிருக்கும். அதிலிருந்து வித்தியாசம் காட்டி, தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நகராட்சியின் செயலை பாராட்டித்தான் ஆக வேண்டும். ஆனால்,'சொல் ஒன்று செயல் வேறு' என்கிற விதமாக நிலவரம் இங்கும் இருப்பதுதான் சோகமே. அந்தக் கட்டடத்தைச் சுற்றியே ஏகப்பட்ட பிளாஸ்டிக் கவர்களும் மது அருந்திய பிளாஸ்டிக் கப்புகளும்  பரவிக் கிடந்தன.


அடுத்ததாக, சந்தைப்பேட்டை மார்க்கெட்டுக்குள் நுழைந்தோம். உழவு நிலம் போலவும் துர்நாற்ற மார்க்கெட் போலவும் காட்சி அளித்தது. அவசரகதியாய் சகதியில் நீந்தி, வேன் மார்க்கெட் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிற பகுதிக்கு வந்தோம். வீதியெங்கும் அசுத்தமாக,  பார்க்கும் இடமெல்லாம் குப்பைக்கூளமுமாய் இருந்தது. "நாங்களும் நகராட்சி அதிகாரிகளிடம் எத்தனையோமுறை முறையிட்டும் பார்த்துட்டோம். ஒன்றும் நடவடிக்கை இல்லை" என்றார்கள் அந்தப் பகுதியின் வேன் டிரைவர்கள். நகரத்தின் மத்தியில் அமைந்திருக்கும் சுகாதாரப்பணிகளை செயல்படுத்தும் மண்டல துணை இயக்குநர் அலுவலகமே சுகாதாரக் குறைச்சலாகக் காணப்பட்டதுதான் பெருங்கொடுமை.

புதுக்கோட்டை நகரின் சிறப்பே, அதன் நீண்ட அகன்ற ராஜவீதிகள்தான். அதனுடைய தற்போதைய நிலைமை பரிதாபமாகக் காட்சித் தருகின்றன. அடிக்கடி அடைத்துக்கொள்ளும் சாக்கடைகள், ஆக்கிரமிப்புகள், குப்பைகள் என்று ராஜவீதிக்கள் இன்று சோக வீதிகளாக இருக்கின்றன.

உள்ளூர்வாசிகள் மற்றொரு விஷயத்தையும் கோடிட்டுக் காட்டினார்கள். "தனியார் பேருந்துகள் வைத்திருப்பவர்கள், இந்த ராஜவீதிகளை பார்க்கிங் பகுதியாக பயன்படுத்துகிறார்கள். இங்கேயே பேருந்துகளைக் கழுவி சுத்தம் செய்வதால் அதுசார்ந்த கழிவுகளால் ராஜவீதிக்கள் நாசம் அடைகிறது" என்றார்கள். இதுதவிர, உழவர் சந்தை, வாரச்சந்தை பேருந்து நிலையப்பகுதிகள் சுகாதாரமின்றி இருப்பதைக் காண முடிந்தது.

இதுகுறித்து நகராட்சியின் சுகாதாரத்துறை அலுவலர் யாழினியிடம் பேசினோம். "மக்கள் கூடும் இடங்களில் குப்பைகள் சேருவது இயல்பான விஷயம்தான். அந்தக் குப்பைகளைத் தேங்கவிடாமல் எங்கள் சுகாதாரக் களப் பணியாளர்கள் தினமும் நகரை சுத்தம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். பெரும்பாலானக் குப்பைகள் பிளாஸ்டிக் பொருள்களாகவே இருப்பதால், அதை தவிர்க்கும்படி மக்களிடம் வியாபாரிகளிடம் வலியுறுத்திவருகிறோம். அதைப் பின்பற்றினாலே, நகரில் சேரும் குப்பைகள் ஐம்பது சதவிகிதம் குறைந்து விடும்" என்றார்.