வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (01/12/2017)

கடைசி தொடர்பு:12:25 (01/12/2017)

'சாதனையாளர்களுக்கும் பணம்தான் தகுதியா' - கூலித் தொழிலாளி மகளின் காமன்வெல்த் கனவு கானல் நீரான சோகம்

பட்டுக்கோட்டை அண்ணாநகரில் வசிப்பவர் லோகப்ரியா. பளு தூக்கும் வீராங்கனை. சிறுவயதிலேயே சாதனையாளராக மிளிர்கிறார். 'இரும்புப் பெண்மணி' என்ற பட்டத்தை இரண்டுமுறை வென்றச் சாதனையாளர். ஆனால், எல்லா சாதனையாளர்களுக்கும் பெரும் சவாலாக இருக்கும் பொருளாதார நெருக்கடி இவருக்கும் ஏற்பட்டு பெரும் வாய்ப்புகளைத் தட்டிப் பறித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அப்படி ஒரு பெரும் வாய்ப்பு இவரைத் தேடி வந்திருக்கிறது. கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த்  போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியை லோகப்ரியா பெற்றிருக்கிறார். ஆனாலும், அதில் கலந்துகொள்ள ஆகும் செலவீனங்கள் பெரும் தொகையாக இருக்கவே, அந்த பெரும் வாய்ப்பு கைநழுவிப் போயிருக்கிறது.

நம்மிடம் பேசிய லோகப்ரியா, "2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டு, அதில் முதலிடமும் 'தமிழ்நாட்டின் இரும்புப் பெண்மணி' என்ற பட்டயமும் பெற்றேன். அடுத்ததாக, அகில இந்திய அளவிலான பளுதூக்கும் போட்டி, மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூரில் மே மாதம் நடைபெற்றது. அதிலும் முதலிடமும் 'இந்தியாவின் இரண்டாவது இரும்புப் பெண்மணி' பட்டயமும் பெற்றேன். மேலும், தென்னிந்தியா அளவிலான பளுதூக்கும் போட்டி கேரளா மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்றது. அதிலும் முதலிடம் பெற்றேன். இதனால் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றேன்.

என் திறமையை உலக அளவில் நிரூபித்து, இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு இது . எனது பல வருட கனவும் கூட. ஆனால், அதில் கலந்துகொள்ள தென்னாப்பிரிக்கா சென்றுவர, ஏனைய செலவுகளுக்கு 2,50,000 ரூபாய் தேவைப்பட்டது. அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவது? ஆனாலும், அந்தப் பணத்தைத் திரட்டுவதற்கான கடுமையான முயற்சிகளில் நானும் என் நலவிரும்பிகளும் ஈடுபட்டோம். ஒன்றும் பயனில்லை. என் தந்தை ஒரு கூலித் தொழிலாளி. என்னுடன் உடன் பிறந்தவர்கள் இரண்டு பெண்கள். நான் மிகவும் ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால், எங்களை நம்பி அவ்வளவு பணம் தர யாரும் தயாராக இல்லை. நான் என் திறமையை முன்னிறுத்தி பண உதவி கேட்டபோதும் நான் சிறுமைப்படுத்தப்பட்டேன்" என்றவர் தொடர்ந்து,"ஏன் சார், என்னை மாதிரி ஏழை சாதனையாளர்களுக்கு பணம்தான் தகுதியா? திறமை தகுதி இல்லையா?'' கண்களில் துளிர்க்கும் கண்ணீர்த் திவலைகளோடு அந்தப் பெண் கேட்டபோது, அதில் உள்ள உண்மை நம் தொண்டைக்குழியைச் சுட்டு, பாலைவனமாக்கியது.