வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (01/12/2017)

கடைசி தொடர்பு:12:24 (01/12/2017)

உயிர்ப் பலி வாங்கக் காத்திருக்கும் குடிநீர்த்தொட்டி! அச்சத்தில் மக்கள்

பொதுவாகவே கிராம மக்கள் தங்கள் பகுதியில் குடிநீர்த் தொட்டிக் கட்டிக் கொடுங்க என்றுதானே கலெக்டரிடம் மனு கொடுப்பது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சேந்தன்குடி கிராம மக்களோ, 'எங்கள்  ஊரில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து  அப்புறப்படுத்துங்கள்' என்ற கோரிக்கையை கலெக்டரிடம் வைத்துவிட்டு, கடந்த இரண்டு வருடங்களாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

'அட' என்ற ஆச்சரியத்தோடு விஷயத்தை விசாரித்தபோதுதான் அந்தக் குடிநீர்த் தொட்டியால் ஏற்படப் போகும் ஆபத்து நமக்குப்  புரிந்தது. ஐந்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது. அது சேந்தன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருப்பதுதான் ஊர் மக்களின் பயத்துக்கும் பதற்றத்துக்கும் காரணமாக இருக்கிறது.

"1980-ம் ஆண்டு இந்தத் தொட்டி கட்டப்பட்டது. கடந்த 35 வருடங்களா கிராமத்தின் குடிநீர் தேவை இந்தத் தொட்டி மூலம் பூர்த்தி செய்யப்பட்டுவந்தது. தொட்டியின் நிலைமை ரொம்பவும் மோசமாயிட்டதால, இரண்டு வருடங்களுக்கு முன்பே அதை பயன்படுத்துவதை  நிறுத்திவிட்டு, புதிதாக  குடிநீர் தொட்டியை வேற இடத்தில் கட்டிட்டோம். பயன்பாடு இல்லாத இந்தத் தொட்டியை இடிக்கக் கோரி யூனியன் ஆபீஸ்ல ஆரம்பித்து, கலெக்டர் ஆபீஸ் வரை மனு கொடுத்துட்டோம்.சின்னப் பிள்ளைகள் படிக்கிற பள்ளி வளாகத்துக்குள்ளே இது இருக்கிறதுதான் எங்கள் பயத்துக்குக் காரணம்'' என்றார் நம்மிடம் பேசிய கண்ணன் என்பவர்.

"இந்த ஸ்கூலில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கிற பிள்ளைகள் இருக்காங்க. அந்தக் குடிநீர்த் தொட்டி பக்கமா அடிக்கடி விளையாடப் போயிடுவாங்க. தொட்டியோட தூண்கள் எல்லாமே காரைப் பெயர்ந்துக் கிடக்கிறது. சின்னப்பிள்ளைகளுக்கு என்ன தெரியும்? தூணைப் பிடித்து, சுற்றிச்சுற்றி விளையாடுவார்கள். சின்னதா அசம்பாவிதம் நேரிட்டால் என்ன பண்ணமுடியும்? அதான் அந்தப் பக்கம்  பிள்ளைகள் போகாமல் தடுக்கறதுக்குன்னே ஒரு டீச்சரைப் போட்டு வெச்சிருக்கோம். அந்தத் தொட்டியைப் பார்த்தாலே  எங்களுக்கே காவு பயம் பிடிக்குது" என்கின்றனர் இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள். ஆபத்தான நிலையில் இருக்கும் இந்தக் குடிநீர்த் தொட்டியினால் பேராபத்து ஏதும் நிகழ்வதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நல்லது.