வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (01/12/2017)

கடைசி தொடர்பு:07:32 (01/12/2017)

ஒகி புயல் பாதிப்பு; பள்ளிகளுக்கு விடுமுறை-நாகர்கோவிலில் ரயில் சேவை நிறுத்தம்

ஒகி புயல் தாக்குதலைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

ஓகி புயல்

 

வங்கக்கடலில் உருவான ஒகி புயல் குமரி மாவட்டத்தைப் புரட்டிப்போட்டுள்ளது. புயல் மற்றும் கனமழைக்கு 4 பேர் உயிர் இழந்தனர். ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் விழுந்ததால் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. 
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்-நாகர்கோவில், பயணிகள் ரயில் உள்பட 8 ரயில்கள் இன்று முழுக்க ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை 6 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பேரிடர் மீட்புக்குழு கன்னியாகுமரி சென்றுள்ளது. அமைச்சர் உதயகுமார் மீட்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தார். 

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் நேற்று கனமழை அடித்தது. இதையடுத்து அந்த மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.