வெளியிடப்பட்ட நேரம்: 07:01 (01/12/2017)

கடைசி தொடர்பு:07:30 (01/12/2017)

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

தென் மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

மழை
 

வங்கக்கடலில் தோன்றிய ஒகி புயல் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கியது. இதில் அந்த மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஏராளமான மரங்கள் சாய்ந்தன. 4 பேர் உயிரிழந்தனர். மின்கம்பங்கள் விழுந்ததால் மின்சாரம் தடைபட்டது. நேற்றிரவும் குமரியில் மழை தொடர்ந்தது. இன்றும் பல இடங்களில் செல்போன் இணைப்புகள் சரியாகவில்லை. இந்நிலையில், புயல் லட்சத்தீவு நோக்கி நகர்ந்துள்ளது. ஆகவே, தென் மாவட்டங்களுக்கு இனி புயல்பாதிப்பு இல்லை.
ஆனால், அடுத்த 12 மணிநேரத்துக்கு தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் நேற்று கனமழை கொட்டியது. இந்த மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று மழை பெய்துவருகிறது. ஆனால், கன்னியாகுமரி, நெல்லையில் இன்று காலை மழை ஓய்ந்துள்ளது. இதற்கிடையே, சென்னையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். தேனி மாவட்டப் பள்ளிகளுக்கும் இன்று காலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் குந்தா, கோத்தகிரி, உதகை, குன்னூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.