வெளியிடப்பட்ட நேரம்: 07:59 (01/12/2017)

கடைசி தொடர்பு:12:23 (01/12/2017)

``எங்கள் ஊர் சாலைகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்போறோம்" - கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்

"ஒரு மழைக்கே நம்ம ரோடுகள் தாங்காதுனு சொல்லுவாங்க. ஆனா, எங்க ஊரு ரோடு சின்ன தூறலுக்கே தாங்காது. இந்த ஆண்டும் அப்படியே நடந்திருக்கு” என வேதனையில் கொந்தளிக்கிறார்கள் கல்லாலங்குடி கிராமத்து மக்கள். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலிருந்து வடகாடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது கல்லாலங்குடி கிராமம். அந்தக் கிராமத்தின் சாலை வழியாக பேருந்துகளிலும் இருசக்கர வாகனங்களிலும் பயணிப்பவர்கள் மழைக்காலம் இல்லாத நாள்களிலேயே ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் செல்வார்கள். ”மழைக்காலம் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். பாதசாரிகள் நடக்கவே முடியாது. வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் இந்த ரோட்டு வழியா போகணும்னு சொன்னாலே சோகமாயிடுவாங்க. ஸ்கூல் போகிற பிள்ளைகள் நிலைமையை சொல்லவே வேண்டாம். காலில் சேற்றுப்புண் வந்து கஷ்டப்படுவாங்க. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைமைதான் நீடிக்குது” எனப் புலம்புகிறார்கள் ஊர் மக்கள்.

கிராமத்து இளைஞர்கள் இன்னும் ஒருபடி மேலே போய்,"போன ஆண்டு குண்டும் குழியுமா, சேறும் சகதியுமா இருந்த இதே ரோட்டுல, நாத்து நடும் போராட்டம் நடத்தினோம். இந்த ஆண்டு ரோடு செத்துடுச்சுனு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டலாம்னு இருக்கோம்" என்றார்கள்.

அதிகாரிகள் தரப்பிலோ, "மழைக்காலம் வந்துட்டாலே, பெய்கிற மழைக்கு தேசிய நெடுஞ்சாலைகளே பாதிக்கப்படுகிறது. கிராமத்துச்சாலைகள் மட்டும் தப்பமுடியுமா? இருந்தாலும் மழைக்கால பாதிப்புகளையெல்லாம் முன்கூட்டியே கணித்து, மராமத்துப் பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்துகொண்டுதான் வருகிறோம்"என்றார்கள்.