வெளியிடப்பட்ட நேரம்: 09:44 (01/12/2017)

கடைசி தொடர்பு:11:16 (01/12/2017)

எ சேக்கிழார் பை எடப்பாடி பழனிசாமி... ஆதீனம், எமி ஜாக்சன் ரியாக்ஷன்கள் என்ன? - ஒரு கலாட்டா!

தஞ்சையில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், கம்பராமாயணம் தந்த சேக்கிழார்னு நம்ம முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்காரே, இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? என்று சில பிரபலங்களிடம் கேட்டால் என்ன சொல்லியிருப்பாங்கன்னு கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டுப் பார்ப்போம் பாஸ்!

கம்பராமாயணம்

ஹெச்.ராஜா
காலங்காலமாக இந்துக்களின் வரலாற்றைத் திரிப்பதே திராவிடக் கட்சிகளின் வேலையாக இருந்துவருகிறது!  தொடர்ச்சியாக, பெரும்பான்மை இந்துக்களின் கடவுளான ராமனுக்கு எதிராகவும், ராமாயணத்துக்கு எதிராகவும் விஷமத்தனமான கருத்துகளைத் தெரிவிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுதொடர்பாக, தமிழகத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் கவர்னர் விசிட் அடித்து, கம்பராமாயணம் எழுதியது கம்பர் என்ற உண்மை தெரிந்திருக்கிறதான்னு ஆய்வு நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!

சீமான்
என் முப்பாட்டன் கம்பனால் எழுதப்பட்டதுதான் கம்பராமாயணம் என்ற வரலாற்றை தமிழக முதல்வர் மறைப்பதையும், இருட்டடிப்பு செய்வதையும் நாம் தமிழர் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது! இந்த ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதே சிந்தனையாக இருப்பவர்களிடம் பாரதியார் கவிதைகள் நூலைக் கொடுத்து, இதை யார் எழுதியது என்று கேட்டுப் பாருங்கள், வைரமுத்துன்னு சொல்வாங்க! கம்பரைப் போலவே சேக்கிழாரும் ஒரு தமிழரே! இப்படி, தமிழர்களுக்கு இடையிலேயே குழப்பத்தை ஏற்படுத்தி, தமிழர்களை அவமானப்படுத்தி, அதன்மூலம் தமிழ்ச் சமூகத்தின் இலக்கியத் திறமையை கொச்சைப்படுத்தி இருக்கிறார் தமிழக முதல்வர்! எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா எடுத்து ஊர் ஊராகச் சுற்றுகிறார்களே, கம்பருக்கோ சேக்கிழாருக்கோ முப்பாட்டன் முருகனுக்கோ நூற்றாண்டு விழா எடுத்திருக்கிறார்களா, பேனர், கட் அவுட்டுகள் வைத்திருக்கிறார்களா. இந்தத் திராவிடக் கட்சிகளை வீட்டுக்கு அனுப்புவதற்கு அச்சாரமாக இந்த ஆர்.கே நகர் தேர்தலில் எங்களை வெற்றி பெறச் செய்யுங்கள்!

மதுரை ஆதீனம்
கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார்தான்னு முதல்வர் சொன்னது தப்பேயில்ல! ஏற்கெனவே பெரியபுராணத்தை சிவன் சொல்லச்சொல்லத்தான் சேக்கிழார் எழுதினார்ங்கறது வரலாறு! அதேபோல ராமபிரான் சொல்லச்சொல்ல சேக்கிழார் எழுதியதுதான் கம்பராமாயணம்! ஆனால், அந்த ராமாயணத்தை காப்பியடிச்சு தன்னோட பெயரை போட்டுக்கிட்டவர்தான் கம்பர்! இதை நான் சொல்லல, நேற்று என் கனவில் வந்த சிவபெருமான்தான் சொன்னது! அந்தக் காலத்துலயே காப்பிரைட் பிரச்னையெல்லாம் இருந்திருக்குது! இப்ப இந்த உண்மையை நம்ம முதல்வர் சொன்னதால, இனி இதுக்கு சேக்கிழார் ராமாயணம்னுதான் பெயர் வைக்கணும்! 

எமி ஜாக்ஸன்
நான் மதராசபட்டினம் படத்துல நடிக்கிறப்பவே தமிழ் கத்துக்கிட்டேன்! அடுத்து, உதயநிதிகூட கெத்து படம் பண்றப்ப லைப்ரரில புக்ஸ் திருடுற பொண்ணா நடிக்கிறப்ப ஹம்பராமாயணம் புக்லாம் வாசிச்சிருக்கேன்! அதை எழுதுனவர் ஹம்பர்னு தப்பா சொல்லிக்குடுத்தாங்க! இப்பதான் ஷேக்ஸ்பியர் சாரி ஷேக்ளர்னு தெரிஞ்சுக்கிட்டேன்! இந்த உண்மைய சொன்ன சீஃப் மினிஸ்டர்க்கு தேங்ஸ்! ஷேக்ளர் பத்தி இன்ட்ரஸ்டிங் மேட்டர் எதாவது இருந்தா இனி படிச்சு தெரிஞ்சுப்பேன்!
 
டி.ஆர்.
கம்பர் எழுதுனது கம்பராமாயணம்!
சேக்கிழார் எழுதுனது பெரிய புராணம்!
அருமையான இசைப்படம் சங்கராபரணம்!
என்னோட பையன் நடிச்ச படம் வானம்!
தமிழகத்தின் துயரம் ஜெயலலிதா மரணம்!
அன்றிலிருந்து அரசாங்கம் அடிக்குது குட்டிக்கரணம்!
தமிழகம் குட்டிச்சுவரானதுக்கு இதுதான் காரணம்!
அவங்கள போடச் சொல்லணும் தோப்புக்கரணம்!
அதுக்கு ஆர்.கே நகரில் மாற்றம் வரணும்!
அதுக்கு நல்லவங்களுக்கு வெற்றி தரணும்!
ஏ டன்டனக்கா! டனக்கனக்கா!

ஸ்டாலின்
இந்த அ.தி.மு.க பினாமி குதிரைபேர ஆட்சிக்கு, குதிரை பேரம் நடத்தவே நேரம் சரியா இருக்கு! இதுல கம்பராமாயணம் எழுதுனது யாரு, மகாபாரதம் எழுதுனது யாருன்னு கேட்டால் எப்படி சொல்வாங்க? மணல் குவாரி எங்கெங்கே இருக்கு, யார் யார் பெயரில் இருக்கு, எவ்வளவு கமிஷன் வருதுன்னு கேட்டால் கரெக்ட்டா சொல்வாங்க! மத்திய அரசை எப்படி காக்கா பிடிக்கலாம்னு மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எப்படி கம்பராமாயணம் நினைவுக்கு வரும்? இந்தக் கொடுமையையெல்லாம் முத்தமிழறிஞர், தலைவர் கலைஞர் கேட்டால் மிகுந்த வேதனையடைவார். திராவிட இயக்கங்களால் தமிழ் வளர்ந்த வரலாறு மாறி, இந்த குதிரை பேர அரசால் தமிழ் அழிந்து கொண்டிருக்கும் அவல நிலை! இதை முடிவுகட்ட, வரவுள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை அமோக வெற்றி பெறச் செய்யணும்னு கேட்டுக்கொள்கிறேன்!

தமிழிசை
கம்பராமாயணத்தை எழுதியது கம்பர் என்ற எளிமையான உண்மையைக்கூட தெரிந்துகொள்ளாத முதல்வர் இருப்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஏனென்றால், தமிழ் தமிழ் என்று புரட்டுப் பேசி, தமிழையும், தமிழறிவையும் மழுங்கடிக்கும் ஆட்சியைத்தான் திராவிடக் கட்சிகள் கொடுத்து வந்துள்ளன! அண்ணன் ஸ்டாலின் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன், உங்களுக்காவது கம்பராமாயணத்தை எழுதியது யாரென்று தெரியுமா? ஏனென்றால், இந்தியை எதிர்க்கிறேன்னு சொல்லிட்டு அவங்க நடத்தும் பள்ளிகளிலெல்லாம் ஆங்கிலமும் இந்தியும் தான் கற்றுத் தருகிறார்கள்! இந்த தமிழிசையின் தலைமையில் தமிழகத்தில் தாமரை விரைவில் மலரும்! தாமரை மலரும்போது, தமிழும் மலரும்!


டிரெண்டிங் @ விகடன்