வெளியிடப்பட்ட நேரம்: 08:55 (01/12/2017)

கடைசி தொடர்பு:09:07 (01/12/2017)

விலகிச்சென்ற ஒகி புயல் திருவனந்தபுரம் அருகே மையம் கொண்டுள்ளது!

கன்னியாகுமரியில் மையம் கொண்டிருந்த ‘ஒகி’ புயல் தற்போது நகர்ந்து திருவனந்தபுரம் அருகே மையம் கொண்டுள்ளது.

புயல்

குமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை மற்றும் வேகமாக வீசும் காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிக் கிடக்கிறது. நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனிடையே, கன்னியாகுமரி அருகே இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒகி புயலாக மாறி குமரி மாவட்டத்தையே புரட்டிப் போட்டது. 

குமரி கடலோரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டிருந்த ஒகி புயல் விலகிச் சென்று தற்போது திருவனந்தபுரத்தின் மேற்கு திசையில் 230 கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது. வேகமாக காற்று வீசுவதால் 500-க்கும் அதிகமான மரங்கள் சாய்ந்துவிழுந்தன. முக்கியச் சாலைகள் மட்டும் அல்லாமல் கிராமச் சாலைகள், தெருக்களிலும் மரங்கள் விழுந்து கிடப்பதால் பொதுமக்களால் எங்கேயும் செல்ல முடியாத நிலைமை உள்ளது. பொதுமக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும், அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே வெளியில் செல்லலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் அறிவுறுத்தியுள்ளார்.