வெளியிடப்பட்ட நேரம்: 10:06 (01/12/2017)

கடைசி தொடர்பு:10:20 (01/12/2017)

”கரன்ட், தண்ணி இல்ல... சாப்பிட மிளகாய்ப்பொடி சோறு!” கலங்கும் திடீர் நகர் மக்கள் #SpotVisit #ChennaiSouls

கர சீரமைப்பு என்ற பெயரில், குறிப்பிட்ட இடத்தில் இருந்து அந்நகரத்துக்கு வெளியே தூக்கி எறியப்படுவது வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களாகத்தான் இருப்பார்கள். இம்முறை, ஆறு சீரமைப்பு என்ற பெயரில் அது நிகழ்ந்திருக்கிறது.

நுங்கம்பாக்கம், கிரீம்ஸ் சாலை திடீர்நகர்ப் பகுதியில் இருந்த சுமார் 603 வீடுகள், கடந்த நவம்பர் 21-ம் தேதி, அடையாறு ஆறு சீரமைப்புப் பணியின் ஒரு பகுதியாக இடிக்கப்பட்டன. அங்கு வசித்த மக்களுக்கு பெரும்பாக்கத்தில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் வீடுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மக்கள்

பெரும்பாக்கம் சென்றோம். எங்கு திரும்பினாலும் வானுயர்ந்து நிற்கும் எட்டு மாடிக் கட்டடங்கள், தரையில் பீரோ, கட்டில் என கூரையற்றுக் கிடக்கும் வீட்டு உபயோகப் பொருள்கள், பள்ளிக்குச் செல்லாமல், செல்ல வழியற்று அங்கு விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள், என இயல்பு திரிந்த சூழலிருக்கிறது அந்தப் பகுதி. திடீர்நகரிலிருந்து இங்கு பெயர்த்து வரப்பட்டிருக்கும் 603 குடும்பங்களுக்கும், ஒரு குடும்பத்துக்கு 350 சதுர அடியில் ஒரு வீடு என  ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தண்ணீர், மின்சார வசதி இன்னும் அங்கு தரப்படவில்லை.

"எங்க வீடு மூணாவது மாடிம்மா. என் வயசுக்கு எப்புடி ஏறி இறங்குவேன்? என் பேரப்புள்ளைங்க இங்கயிருந்த ஸ்கூலுக்குப் போயிட்டு வர முடியல. மேற்கு சைதாப்பேட்டையில காலேஜு படிக்கிற என் பேத்தி, இங்கயிருந்து எப்படிம்மா அங்க போயிட்டு வர முடியும்? வீட்டுல கரன்ட் கொடுக்க இப்போதான் வேலை பார்த்துக்கிட்டு இருக்காங்க. தண்ணியும் இல்ல. என்ன பண்ணுறதுனே தெரியாம, ரோட்டுல உக்காந்துட்டு இருக்கேன்'' - நொந்துபோயிருக்கிறார் லலிதா பாட்டி.

மக்கள்

"எங்க வீட்டுச் சாமான்களையெல்லாம் சரியா எடுக்கக்கூட நேர அவகாசம் கொடுக்கல. என் வீட்டுக்காரர் ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் கேன்சர்ல இறந்துபோனார். ஆம்பளத் துணை இல்லாம கஷ்டப்பட்டுட்டிருந்த நேரத்துல, இப்போ இந்தத் துயரமும் சேர்ந்துகிச்சு. ஏழாவது மாடியில எங்களுக்கு வீடு கொடுத்திருக்காங்க. எப்படி ஏறி, இறங்கப்போறோம் தெரியல. அங்க நுங்கம்பாக்கம் பக்கத்துல நான் ஒரு வீட்டுல வேலைபார்த்தேன். அவங்கதான் என் புள்ளைக்கு பீஸு கட்டுவாங்க. ஆனா, இப்போ நான் இங்கயிருந்து எப்படி அங்க வேலைக்குப் போக முடியும்? என் புள்ள பள்ளிக்கூடம் போகணும்னு அங்க என் தங்கச்சி வீட்டுல விட்டுட்டு வந்துருக்கேன். இங்க கரன்டே இல்ல, போன்கூட சார்ஜ்போட முடியல. என் புள்ள அங்க எப்படி இருக்கான்னு ஒரு போன் கேட்டு பேசக்கூட வக்கில்லாம இருக்கேன். ஒரு வாரமா எனக்கு நெஞ்சு வலிக்குது. என்னனு போய் பார்க்க, இங்க பக்கத்துல ஆஸ்பத்திரியையும் காணோம்'' - அழுகிறார் தவமணி.

"திடீர்நகர்ல நாங்கயெல்லாம் 70 வருஷமா வாழ்ந்துட்டு வந்த குடும்பங்க. எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு எங்களை இங்க கூட்டியாந்து விட்டிருந்தா, நீ நல்லவன். அங்க எங்க வீடுகளையும் இடிச்சிட்டு, இங்க வீட்டு வேலைகளையும் முடிக்காம எங்களை அலைக்கழிச்சு இப்படி நாசம் பண்ணுறீங்களே? காலையில 99ல ஏறினேன்; 19 ரூபா டிக்கெட்டு. அடுத்து 95ல ஏறினேன். ஏதோ சோழநல்லூராமே, அங்க இறக்கிவிட்டுட்டாங்க. அதுக்கு ஒரு 12 ரூபா டிக்கெட்டு. அங்கிருந்து செம்மஞ்சேரிக்கு ஒரு பஸ்ஸு. அதுக்கு ஒரு 8 ரூபா. மொத்தம் 39 ரூபா. அப்போ, வேலைக்குப் போக வர நாங்க தினமும் பஸ்ஸுக்கே போக 39, வர 39 ன்னு செலவழிக்கணும். சம்பாதிக்கிறதையெல்லாம் பஸ்ஸுக்காரன்கிட்ட கொடுத்துட்டு, சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவோம்? இங்க வந்து ஒரு வாரம் ஆகிருச்சு. இதுவரை ஒரு கேன் தண்ணிதான் குடிக்கத் கொடுத்திருக்காங்க. மூணு நாள் மட்டும் சாப்பாடு கொடுத்தாங்க. சோத்துல மொளகாப்பொடியப் போட்டு பிசஞ்ச மாதிரியிருந்த அந்தச் சாப்பாட்டையும் எங்க பசி சாப்பிடவெச்சது" என்று சவுதாமணி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ''அந்த சோத்தை வாங்க  நாங்க பட்ட கஷ்டம் இருக்கே... 'போய் அலாட்டுமென்டு நம்பர எடுத்துட்டு வா, அத எடுத்துட்டு வான்னு அவ்வளவு அலையவிட்டாங்க தெரியுமா?" என்று புலம்பினார் சுசீலா அருள்மணி. அந்தக் குடும்பங்களின் சிதைந்துபோயிருக்கும் நிகழ்காலமும், திக்கற்ற எதிர்காலமும் மனதை கனக்கவைத்தன.

பெரும்பாக்கம்

அங்கு ஆய்வுக்கு வந்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "எங்களால் முடிந்தளவு எல்லா வேலைகளையும் வேகமாக நடத்திவருகிறோம். நாங்கள் வேறு இடத்தில்தான் இவர்களுக்கு இடங்களை ஒதுக்கியிருந்தோம். ஆனால், இவர்கள்தான் 'எங்களுக்கு இந்த இடம்தான் வேண்டும், தண்ணீர், மின்சார இணைப்பையெல்லாம் நாங்கள் குடியமர்ந்து பின்னால் செய்துகொடுத்தாலும் பரவாயில்லை' என்றார்கள். தண்ணீர், உணவு அளித்திருக்கிறோம்" என்று  சொல்லிவிட்டுச் சென்றார்.

தண்ணீர், மின்சார வசதி ஒரு வாரத்தில் முடித்துக்கொடுக்கப்படும் என்று அம்மக்களிடம் சொல்லப்பட்டிருந்தாலும், இன்னும் முடிந்தபாடில்லை. பிள்ளைகள் புதிய குடியிருப்புப் பகுதியிலிருந்து பள்ளிக்கு வந்துசெல்வது கடினமாக இருக்கும், எனவே இந்தக் கல்வி ஆண்டு முடிந்தபின் குடியிருப்பை மாற்றிக்கொள்கிறோம், புதிய குடியிருப்புக்கு அருகில் பிள்ளைகளை அடுத்த வருடம் சேர்த்துக்கொள்கிறோம் என்ற அவர்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. திடீர்நகரைச் சுற்றி தங்கள் வாழ்வாதாரங்களைக் கொண்டிருந்த மக்கள், இப்போது அவற்றையும் இழந்து நிற்கின்றனர். இதுபற்றி சென்னை கூட்டுறவு கமிஷனர் கார்த்திகேயனிடம் கேட்டோம். ''ஆற்றங்கரையோரம் இத்தனை வருடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்துவந்த மக்களுக்கு 12 லட்ச ரூபாய் மதிப்பில் வீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. குறைகள் அனைத்தும் ஒரு சில நாள்களில் சரி செய்யப்படும், மக்களுக்கு போக்குவரத்துக்காக ஒரு வருடத்துக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படும்'' என்றார்.

அதற்குப் பிறகு?