வெளியிடப்பட்ட நேரம்: 10:04 (01/12/2017)

கடைசி தொடர்பு:10:04 (01/12/2017)

நோய்களின் கூடாரமாகிறதா மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனை?.. நேரடி விசிட்!

அரசு மருத்துவமனை, hospital

"விபத்தில் சிக்கி ஆபத்தில் வருபவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகூட அளிப்பதில்லை. அவர்களை, தஞ்சாவூர் அல்லது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கும் ஏஜென்ட் வேலையைத்தான் இந்த மருத்துவமனை செய்கிறது" எனப் புகார்கள் எழுந்ததையடுத்து, அந்த மருத்துவமனைக்கு விசிட் அடித்தோம். 

நாகை  மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி, மற்றும் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள், மருத்துவத்துக்காக நம்பியுள்ள ஒரே அரசுப் பொது மருத்துவமனை, மயிலாடுதுறையில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனை. நுழைந்தபோதே மருத்துவமனையின் பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருந்த "அரசு" என்ற எழுத்துகளில், "ர" என்ற  எழுத்து தலைகீழாய்த் தொங்கிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. பிறகு, மருத்துவமனையை நாம் சுற்றிவந்தபோது... திரும்பிய பக்கமெல்லாம் துர்நாற்றம், குண்டும்குழியுமான சாலைகள், அதில் தேங்கியிருக்கும் மழைநீர், மருத்துவ வளாகம் முழுக்க நாய்களின் தொல்லை, பார்வையாளர்கள் தங்க இருப்பிட வசதி இல்லாமை, கட்டடச் சுவர்களில் எச்சில் என மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகள் நோய்களின் கூடாரமாக உள்ளது.

அரசு மருத்துவமனை, hospital


இப்படியான பகுதிகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த எங்களிடம், பொதுமக்கள் குமுற ஆரம்பித்தனர். ''ஒருநாளைக்கு மட்டும் ஏறக்குறைய 300-லிருந்து 400 பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதுதவிர, ஆயிரக்கணக்கான நோயாளிகள் இங்கு வெவ்வேறு சிகிச்சைக்காக வந்துசெல்கின்றனர். ஆனால், மருத்துவ வசதி மட்டும் சரியாகச் செய்யப்படுவதில்லை. மருத்துவமனைக்கு எதிரே உள்ள சாலை மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மக்களால் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இந்தச் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பே புதிதாக அமைக்கப்பட்டது. ஆனால், அது தரமாக அமைக்கப்படாததால் தற்போது பெய்த மழையால்  சேதமடைந்து குண்டும்குழியுமாக மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதுதவிர, கடந்த அக்டோபர் 23 -ம் தேதி இந்த மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டின் மேற்கூரை திடீரென இடிந்துவிழுந்தது. அந்நேரத்தில், அங்கு யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதன்பின்பு ஒருநாள்  மின்வெட்டு ஏற்பட்டு மருத்துவமனை வளாகமே இருளில் மூழ்கி நோயாளிகளை அவதிக்குள்ளாக்கியது. ஜெனரேட்டர் வசதி இருந்தும் அது முறையாக இயக்கப்படாததே இதற்குக் காரணம்'' என்று அவர்கள் குமுறினர்.

அரசு மருத்துவமனை, hospital

இதுபற்றி மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க பிரமுகருமான அருட்செல்வனிடம் பேசினோம். "மயிலாடுதுறை அரசு மருத்துவமனையைப் பொறுத்தவரை, எந்தவோர் அடிப்படை வசதியும் இல்லை. சுத்தமான குடிநீர்கூட நோயாளிகளுக்குக் கிடைப்பதில்லை. மருத்துவமனையில் அடிக்கடி மின்சாரம் போய்விடுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதற்கு எந்தவிதமான மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை. நாகை மாவட்டத் தலைநகர் மருத்துவமனையை ஒப்பிடுகையில், இங்கு அதிக மக்கள் வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்குச் சரியான இடவசதிகூட இல்லை. எனவே, தமிழக அரசு இதைக் கவனத்தில்கொண்டு இந்த  மருத்துவமனைக்கு அதிக நிதி ஒதுக்கீடுசெய்து இதைத் தரம் உயர்த்த வேண்டும்" என்றார். 


"இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் எல்லாம் தங்களுக்கென்று சொந்தமாகக் கிளினிக் வைத்து வருமானம் ஈட்டுகின்றனர். அதனால் இங்குவரும் நோயாளிகளைச் சரிவர கவனிப்பதில்லை. இங்கு பணிபுரியும் நேரத்தைவிட அவர்கள் தங்கள் கிளினிக்கில் இருக்கும் நேரம்தான் அதிகம். சில நேரங்களில் பணியில் ஒரு மருத்துவர்கூட இருப்பதில்லை. இந்நேரத்தில் ஆபத்து என்று வரும் நோயாளிகளுக்குச் செவிலியர்களே மருத்துவரிடம் போன்மூலம் தொடர்புகொண்டு சிகிச்சைகளைச் செய்கிறார்கள். பிரேதப் பரிசோதனை முடிந்து பிணத்தை வாங்கக்கூட அதிக பணம் செலவிட வேண்டும். பணம் கொடுத்தால்தான் பிணம் என்ற நிலை உள்ளது. இந்த மருத்துவமனையின் அவலத்தை எதிர்த்துப் பல போராட்டங்களை மக்கள் நடத்திவிட்டனர். ஆனால், இந்த நிர்வாகம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதன் போக்கில் போய்க்கொண்டிருக்கிறது" என்றார், பெயர் வெளியிட விரும்பாத ஒருவர்.


இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். "இந்த மருத்துவமனைக்குத் தமிழக அரசு மருத்துவ நிதியிலிருந்து 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 15 கோடி ரூபாயில் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், ஸ்கேன், டயாலிசிஸ் செய்வதற்கான சாதனங்களும் விரைவில் பொருத்தப்பட உள்ளன" என்றார்.

அரசு மருத்துவமனை, hospital

 இதுதொடர்பாக மருத்துவமனை தலைமை மருத்துவர் பாஸ்கர், "இந்த மருத்துவமனையில் போதுமான அளவு வசதிகள் உள்ளன. பார்வையாளர்கள் தங்குவதற்கான இடவசதியை மட்டுமே சரி செய்ய வேண்டும்'' என்றார். இந்த மருத்துவமனையில் சகலவசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்து தரம் உயர்த்த வேண்டும் என்பதுதான் அங்குள்ள மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. கவனிக்குமா அரசு?


டிரெண்டிங் @ விகடன்