வெளியிடப்பட்ட நேரம்: 09:59 (01/12/2017)

கடைசி தொடர்பு:10:11 (01/12/2017)

ரவுடி விஜி கொலையில் நடப்பது என்ன? கொலையாளிகள் தப்பிக்கும் பின்னணி என்ன?

கொலை செய்யும் முடிவோடுதான் கத்திகளைக் கையில் எடுக்கிறார்கள், ரவுடிகள். மருத்துவமனைக்குப் போய், சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைக்கும் வாய்ப்புகளை எதிராளிக்கு ஒருபோதும் கொலையாளிகள் கொடுப்பதில்லை.  சென்னையின் முக்கியப் பகுதியாக விளங்கும், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்குப் பக்கத்தில் நேற்று (29-11-2017) நடந்த கொலையும் அதே ரகம்தான். கொலைகாரர்களின் கத்திகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்ட விஜி என்பவர், அதே இடத்தில் உயிரை விட்டிருக்கிறார். கொலைச் சம்பவத்தைக் காட்டும் சி.சி.டி.வி காட்சிப்பதிவு, சமூக ஊடகத்தில் வெளியாக, அதைப் பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். பத்து பேரைக் கொண்ட கும்பலால், கொலை செய்யப்பட்ட விஜி என்கிற விஜயகுமார், சென்னை தண்டையார்பேட்டை பல்லவன் நகரைச் சேர்ந்தவர். 'நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அப்பு என்பவரைக் கொலைசெய்ய முயன்ற வழக்கு, கஞ்சா விற்பனை வழக்கு என்று  பத்து வழக்குகளில்  தொடர்புடையவர், இந்த விஜி ... பிரபல தாதாவின் டீமில் சமீபத்தில்தான் போய்ச் சேர்ந்தான். அந்த தாதாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகக்கூட இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இதுவரை கொலையாளிகள் சிக்கவில்லை. ஆனால், அவர்கள் குறித்த தகவல் கிடைத்திருக்கிறது' என்கிறது போலீஸ் தரப்பு. 

ரவுடி  விஜிசி.சி.டி.வி காட்சிப் பதிவுகளைப் பார்க்கும்போது,   கொலை முயற்சியின்போது யாரும் தடுக்கவோ, குரல்கொடுத்துக் காப்பாற்றவோ முன் வரவில்லையே என்ற யதார்த்தம் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு அருகேயுள்ள 'மீட்டிங் பாய்ன்ட்' ஏரியாவில்தான் கொலை நடந்திருக்கிறது.  கத்தியை வெளியில் எடுத்தபடி இருபது வயதுடைய இளைஞர்கள் நான்கு பேர் முன்னால் ஓட, அந்தக் குழுவின் தலைவன் போல் இருக்கிறவன், அவர்களுக்குப் பின்னால் ஓடுகிறான். மேற்பார்வை பார்த்தபடி சாலையின் குறுக்கும், நெடுக்குமாக இரண்டுபேர்  எச்சரிக்கையுடன் நடந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவன் மோட்டார் சைக்கிளில் வந்து, அவர்களிடம் எதையோ கேட்டுவிட்டு பின்னர்  மோட்டார் சைக்கிளை விட்டு கீழே இறங்காமல் அவனும் மேற்பார்வை செய்கிறான். கொலையாளிகளைப் பார்த்துவிட்ட விஜி, வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் கார்களுக்கு இடையில் நுழைந்து ஓடுகிறான். அப்போது கத்தியுடன் முதலில் ஓடிவந்த இளைஞர்கள் விஜியின் முதுகில் வெட்டுகிறார்கள். வெட்டுக் காயத்துடன், ஒருவழிப்பாதை போன்று இருக்கும் பகுதியில் விஜி ஓட, கொலைக் கும்பல் பின்னால் ஓடுகிறது. சில நொடிகள் இடைவெளிக்குப்பிறகு கொலையாளிகள், கைகளில் கத்திகளுடன் அந்த ஒருவழிப்பாதை வழியாகவே வெளியே வருகிறார்கள். மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்த ஆசாமிகள், அவர்களது மோட்டார் சைக்கிள்களில் அந்த இளைஞர்களை ஏற்றிக்கொண்டு தப்பித்துச் செல்கிறார்கள். மக்கள் பரபரப்பாக நடமாடிக்  கொண்டிருக்கும் பொதுஇடத்தில் சர்வ சாதாரணமாக 'சம்பவம்' நிகழ்த்திவிட்டுப் போகிறார்கள். இத்தனை பேர் இருக்கிறார்களே... என்ற அச்சம் கொலைகாரர்களது மனதில் கொஞ்சமும் எழவில்லை. காரியத்தை முடித்துவிட்டு எந்த அவசரமும் இல்லாமல் இயல்பாக அங்கிருந்து தப்பிக்கிறது கொலைக்கும்பல். கொலைச் சம்பவம் நடந்த இடம், போலீஸார் நடமாட்டம் அதிகமாக உள்ள இடம். நீதிமன்றப் பாதுகாப்பு, துறைமுகப் பாதுகாப்பு மற்றும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கான பாதுகாப்பு போன்றவைகளுக்காக எப்போதுமே போலீஸார் நிறைந்த இடத்தில்தான் சாதாரணமாக நடந்து முடிந்தது இந்தக் கொலை.

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஒருவரிடம் இந்தச் சம்பவம் குறித்துப் பேசினேன். "எத்தனை பேரைக் கொலை செய்தாலும், கொலையாளிகள்மீது முதலில் போடப்போவது, ஓராண்டு வரையில் சிறையில் அடைக்கும்  குண்டாஸ்தான். அந்த தண்டனையிலும் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (போர்டு) போய் முறையிட்டு தப்பிக்கிறவர்கள் உண்டு. ஓராண்டு சிறை வாசம்  இருந்தவர்கள், வழக்கு விசாரணைக்காகக் கோர்ட்டுக்கு வருவார்கள். அப்போது, கொலைக்கான சாட்சிகள் கோர்ட்டுக்கு வருவது இல்லை. அப்படி அவர்கள் வராதபடி பார்த்துக்கொள்ளும் வேலையை, கொலைக் கும்பலின் தலைவன், வெளியிலிருந்து பார்த்துக்கொள்ளப் போகிறான். சாட்சிகள் கோர்ட்டுக்கு வரவில்லை என்றால் என்னாகும்? போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தால் கோர்ட், வழக்கைத்  தள்ளுபடி செய்யப் போகிறது. வழக்கின் முடிவைச் சொல்ல நீதிமன்றத்துக்கு போதிய சாட்சிகள், ஆதாரங்கள் தேவை. நீதிமன்றத்தின் எதிர்பார்ப்புகளை முழுமையாகச் செய்ய வேண்டியது போலீஸ்தான். போலீஸின் இந்த வேலை, தொழில்ரீதியான கொலையாளிகளிடம் எடுபடுவது இல்லை. குடும்பச் சண்டையில் நடக்கும் கொலை என்றால் கைரேகை, ரத்தம் தோய்ந்த சட்டை, கொலைக்கு முன்னால் நடந்த செல்போன் உரையாடல், அருகில் இருப்பவர்களின்  எழுத்துபூர்வமற்ற வாக்குமூலம் போன்றவைகளை வைத்தே வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்து விடலாம். தொழில்ரீதியான கொலையாளிகளிடமிருந்து அப்படி எதையும் கைப்பற்ற முடியாது. ஸ்பாட்டில் இருந்த சாட்சிகளோ, சாலையில் வேடிக்கைப் பார்த்துவிட்டுப் போனவர்களோ கோர்ட்டுக்கு வரப்போவதில்லை'' என்றார்.

விஜி போன்றவர்களின் வாழ்க்கை, கத்தியின் மீது நடப்பது போன்றதே. பழிக்குப் பழி என்கிற நிலைப்பாட்டிலும், பங்கு பிரிக்கும் தகராறிலும் நடந்துகொண்டிருந்த கொலைகளின் போக்கு இப்போது மாறியிருக்கிறது. ரியல் எஸ்டேட் வணிகம் தொடர்பான மோதல், நம்ம சாதியைத் தப்பாப் பேசிட்டான், நம்ம வீட்டுப் பசங்களை தொட்டுட்டான், மிரட்டிட்டான் என்பது போன்ற காரணங்களுக்கும் இன்று கொலைகள் நடக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாகக் கொலையாளிகள், எளிதில் வெளியில் வர பாதைகள் விசாலமானதாக இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்