கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வைகை ஆற்றின் பிறப்பிடமாக கருதப்படும் முலவைகைப் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் போதிய அளவு தண்ணீர் வரவில்லை. பருவமழை தொடர்ந்து ஏமாற்றியதும், மேகமலை வனப்பகுதியில் மரங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டதுமே இதற்கு காரணம்.

மூலவைகையில் தண்ணீர் இல்லாததால், வருசநாடு, கடமலைக்குண்டு பகுதி மக்கள் கடந்த ஆண்டு கோடையை கடக்க மிகவும் சிரமப்பட்டனர். தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு மாவட்ட நிர்வாகத்தை முறையிட்ட மக்களுக்கு, போர்வெல் அமைத்துக்கொடுக்க மாவட்ட ஆட்சியர் முயற்சி செய்ய, வனத்துறை தடுத்தது. ஆனாலும், தற்காலிக நிவாரணம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது. கோடையில் இவ்வளவு சிரமங்களை மக்களுக்கு ஏற்படுத்திய மூலவைகையில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் இதே தேதியில் காய்ந்து கிடந்த மூலவைகை ஆர்ப்பரிக்கும் காட்சியை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்தோடு பார்த்துச்செல்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக இன்னும் அதிக தண்ணீர் கீழிறங்கலாம் என்றே சொல்லப்படுகிறது. இதனால், மூலவைகை ஆற்றின் கரைப்பகுதியில் இருக்கும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!