வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (01/12/2017)

கடைசி தொடர்பு:10:30 (01/12/2017)

மேகமலையில் பயங்கர நிலச்சரிவு! − முன்னரே எச்சரித்த விகடன்!

வைகை ஆற்றின் பிறப்பிடமான மேகமலை வனப்பகுதியில்  நடக்கும் சுற்றுச்சூழல் வன்முறைகள் குறித்து விகடன் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. 

மேகமலை வன உயிரன காப்பகமாகவும், பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதியாகவும் கருதப்படுகிறது. இப்பகுதியில் மலையை அழித்து சாலை போடப்படுவதாக கடந்த 29.10.2017 ஜுனியர் விகடனில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். மிகப்பெரிய அளவில் மலை துண்டாடப்பட்டதையும், பல நீர் ஓடைகள் மறிக்கப்பட்டிருப்பதையும், மழைக் காலங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் எச்சரித்தோம். இந்நிலையில், தற்போது மேகமலைப் பகுதியில் பெய்துவரும் கனமழையால் சாலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் சின்னமனூர் மேகமலை சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேகமலை மலைப்பகுதியில் உள்ள ஹைவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, இரவகங்கலாறு, மகராஜமெட்டு போன்ற பகுதிகளில் வசிக்கும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளி உலக தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், மலைப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால் மேலே உள்ள மக்களுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. இயற்கையை அழித்த மனிதனை இயற்கை அழிக்கும் என்பார்கள். மலையை துண்டு போட்டு போடப்பட்ட சாலை இன்று துண்டிக்கப்பட்டுக் கிடக்கிறது. 5.5 மீட்டர் அளவு மட்டுமே சாலை போட அனுமதி கொடுத்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி 12 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை சாலையை விரிவுபடுத்திய நெடுஞ்சாலைத்துறையும், மாவட்ட நிர்வாகமும். இப்படி ஒரு வன அழிப்பு நடந்ததை கண்டுகொள்ளாத வனத்துறையுமே இந்த பயங்கர நிலச்சரிவுக்குக் காரணம்.