ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!

ஏர்செல்- மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேக்சிஸின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.5 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய அனுமதி கோரியிருந்ததாகவும் அதற்கு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சட்ட விரோதமாக அனுமதி அளித்ததாகவும் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது.

மேலும், விதிமுறைகளின்படி சுமார் 600 கோடிக்கு மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டுக்கு பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுதான் அனுமதி அளிக்க வேண்டும். அப்படியிருக்கும்போது ரூ.5 ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீட்டுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியிருப்பது குறித்தும் சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது.

இந்த நிலையில், ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் இன்று காலை முதலே அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை திருவான்மியூர் ஸ்ரீராம்நகரில் உள்ள ஸ்ரீ சுஜே சாமமூர்த்தி என்பவரின் மீடியா மேக்னெட் பிஸ்னஸ் சர்வீஸ் என்ற அலுவலகத்திலும் ஆழ்வார்பேட்டையில் உள்ள ராம்ஜி நடராஜனின் டிராவல் மாஸ்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலும் தேனாம்பேட்டையில் உள்ள சடயாவேல் கைலாசம் என்பவரின் இல்லத்திலும் அவென்யூ செளந்தரா மருத்துவமனையிலும் கொல்கத்தாவில் உள்ள ஸ்ரீ மனோஜ் மோகன் ஹாவின் வீடு, அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!