ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேட்பாளரைத் தேடும் பா.ஜ.க 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட சரியான வேட்பாளர் கிடைக்காமல் பா.ஜ.க. திணறி வருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். தே.மு.தி.க. தமிழ் மாநில காங்கிரஸ், பா.ம.க. ஆகியவை தேர்தலில் போட்டியிடவில்லை. காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவைகள் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தேசிய கட்சியான பா.ஜ.க.வும் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணியில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கங்கை அமரன் போட்டியிட்டார். உடல்நலக்குறைவு காரணமாக இந்தமுறை அவர் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால், யாரை நிறுத்தலாம் என்று பா.ஜ.க-வினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத் தலைவர் தமிழிசையை வேட்பாளராக நிறுத்தலாம் என்று சிலர் தெரிவித்தனர். ஆனால், தமிழிசை தரப்பில் கிரீன் சிக்னல் காட்டப்படவில்லை. இதனால் வேட்பாளர் அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, வேட்பாளர் தேர்வில் பாஜக மூத்த நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும்  விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சில நாள்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, கடந்தமுறை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அந்தோணி சேவியருக்கு வாய்ப்பளிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால், மாவட்டச் செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியும் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக கட்சியின் உள்வட்டாரங்கள் தெரிவித்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!