இத்தனைப் பெண்களா பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள்? - அதிர்ந்த ஆண்களின் மனம்! #Speakup #உடைத்துப்பேசுவேன் | men raise their voice against sexual harassment

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (01/12/2017)

கடைசி தொடர்பு:11:24 (15/02/2018)

இத்தனைப் பெண்களா பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள்? - அதிர்ந்த ஆண்களின் மனம்! #Speakup #உடைத்துப்பேசுவேன்

பாலியல்

மீபத்தில், இணையத்தில் அதி தீவிரமாக பரவிவருவது, பெண்கள்மீது நடக்கும் பா­லியல் தொல்லைக்கு எதிரான பிரசாரம். ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டீனுக்கு எதிராக இளம் நடிகை ஒருவர் புகார் எழுப்பினார். தொடர்ந்து, கேட் வின்செலன்ட், ஏஞ்சலினா ஜோலி எனப் பல முன்னணி ஹாலிவுட் நடிகைகள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாகப் பேசினர். அலிஷா மிலனோ என்ற ஹாலிவுட் நடிகை, 'சமூக வலைதளத்தில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை #Metoo என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிடுங்கள். அப்போதுதான் இந்தப் பிரச்னையின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முடியும்' என்றார். பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளைப் பதிவிட, உலகம் முழுவதும் இந்த ஹேஷ்டேக் வைரலானது. 

இதைத்தொடர்ந்து, மற்றொரு ஹேஷ்டேக் ட்விட்டரில் உலவத் தொடங்கியது. அதுதான் #HowIWillChange. ஆண்கள் பலரும், 'இனி பெண்களை மதிப்போம்; அவர்களுக்குப் பாதுகாப்பான சமூகத்தை அளிப்பது எங்கள் கடமை' என்று ட்வீட் செய்துள்ளனர். இதை ஆரம்பித்துவைத்தது, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பென்ஜமின் லா என்ற பிரபல பத்திரிகையாளர். “உங்களுக்குத் தெரிந்த பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் எனில், அவர்களுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தவர்களை உங்களுக்குத் தெரிந்திருக்கும் அல்லது அவர்களுள் நாமும் ஒருவனாக இருப்போம்” என்று ட்வீட் செய்திருந்தார். 

“நான் என் மூன்று மகன்களுக்கும் ஒரு பேரனுக்கும் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுப்பேன். மாற்றம் நம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும்” என்று ஜெஸ்ஸி டி.ஸ்மித் என்பவர் பதிவிட்டிருந்தார். 

’பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை அவர்கள் சொல்லித் தெரிந்துகொள்வதைவிட, அவர்கள் பிரச்னைகளை நானே கற்றுக்கொள்வதுதான் புரிந்துகொள்வதற்கான சிறந்த வழி” என்று அலக்ஸ் ட்ருஸ் பதிவிட்டிருந்தார். 

“ஆண்களுக்குப் பயத்தில் வாழ்வது பற்றி தெரியாது. பெண்களைப் பாதுகாப்பதைவிட, அவர்கள் பயமில்லாத சமூகத்தை உருவாக்குவதைச் சிறந்தது” என்று மற்றொருவர் பதிவிட்டிருந்தார். மேலும் சிலர், “ஆண் என்பதற்காக மற்றவர்கள் செய்த தவறுகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாது” என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். 

இந்த ஹேஷ்டேக் ஆண்கள் மத்தியில் ஒரு நேர்மறையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தங்களுக்கும் இந்தப் பிரச்னைக்கும் சம்பந்தமே இல்லை என்கிற அளவுக்குச் சமூக வலைதளத்தில் விவாதித்தனர். இதற்கிடையில், #IWillChange, #IWillStop, #manspreading என்ற ஹேஷ்டேக்குகளும் சற்றே வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய காலத்தில், சமூக வலைதளம் என்பது குட்டி உலகமாகவே கருதப்படுகிறது. நாம் நம் நிஜ வாழ்க்கையில் இயங்குவதைவிட, இந்த நிழல் வாழ்க்கையில்தான் அதிக நேரம் இயங்கிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களும் விதவிதமாக மாற்றம் பெற்றுவருகிறது. தோற்றம் மாறினாலும், அதனால், பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னவோ ஒன்றுதான்! அப்படியிருக்கையில், ஆண்-பெண் இருவருமே, தனிமனித பொறுப்புடன் செயல்படவேண்டியது அவசியம். சமூக வலைதளத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களால், எத்தனையோ பெண்கள் தங்களின் வாழ்க்கையை தானே முடித்துக்கொண்டது உண்டு. இனியும், அத்தகைய கொடுமைகள் நேராமல் இருக்க, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி உடைத்துப் பேச வேண்டும்! 

ஐந்தில் நான்கு இந்தியப் பெண்கள்(79%), பொது இடங்களில் பாலியல் தீண்டல்களுக்கு ஆளாகிறார்கள் என்கிறது சென்ற வருட ஆய்வு ஒன்று. 70% இந்தியப் பெண்கள் பணியிடங்களில் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகள் பற்றி புகார் அளிப்பதில்லை என்கிறது, இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று. 2007-ல் இந்திய அரசு ஐ.நாவுடன் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில், 53% குழந்தைகள் sexual abuse victim-களாக இருந்தது தெரியவந்தது. எனில், இந்த எண்கள் எல்லாம் யாரோ அல்ல, நாம்தான். இப்படி திக்கெங்கும் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்டாலும், அவற்றைப் பேசாமல் மறைத்த, பேசத் தயங்கிய பெண்களின் தலைமுறைகள் முடியட்டும். 'பேசி என்ன ஆகப்போகிறது?' என்கிறீர்களா? இதுவரை குற்றவாளிகளுக்கு அரணாக இருந்துவந்ததே அந்த எண்ணம்தானே? முதலில் அதைத் தகர்ப்போம். அதற்காகவே இந்தத் தளம். அதற்கு மட்டும்தானா? இல்லை. மனநல கவுன்சலிங் முதல் சட்டரீதியான நடவடிக்கைகள்வரை தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும். தன்னால் சக மனுஷிக்கு நேர்ந்த பாலியல் சீண்டலுக்கு வருந்தித் திருந்தும் ஆண்களின் மனமாற்றங்களையும் வரவேற்கிறோம்.  

பாலியல் குற்றங்களைப் பொசுக்கும் இந்தச் சிறு பொறியை பெரும் அக்னி பிரளயமாக மாற்றும் பயணத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். #SpeakUp என உடைத்துப் பேசுங்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்