'இரட்டை இலையைவிட இரண்டாயிரம் வாக்குகள்!' - தினகரனுக்கு 'செக்' வைத்த சசிகலா

தினகரன்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. கடந்தமுறை சசிகலா அனுமதியில்லாமல் களம் இறங்கினார் தினகரன். இந்தமுறை சசிகலா அனுமதியோடு களமிறக்கப்பட்டிருக்கிறார். ' இரட்டை இலையைவிட இரண்டாயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று, ஒட்டுமொத்த அமைச்சரவைக்கும் செக் வைக்க வேண்டும் என்பதுதான் சசிகலா விதித்துள்ள நிபந்தனை' என்கின்றனர் மன்னார்குடி உறவுகள்.

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளராக மதுசூதனன் களம் இறங்குகிறார். நேற்று முன்தினம் வரையில் மதுசூதனனோடு முரண்பட்டுக் கொண்டிருந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அவருக்கு சால்வை அணிவித்து சமாதானமாகிவிட்டார். ' அ.தி.மு.க வெற்றி உறுதி' எனப் பேட்டி அளித்த கையோடு, தனது ஆதரவாளர்களைக் களம் இறக்கிவிட்டிருக்கிறார் ஜெயக்குமார். தி.மு.க வேட்பாளர் மருது கணேஷுக்கு காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. "தொப்பி சின்னத்தில் கடந்த முறை வாக்குக் கேட்கச் சென்ற தினகரன், வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அப்போது அவருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த அமைச்சர்களும் களமிறங்கினர். வருமான வரித்துறையின் அதிரடி சோதனைகளால் தேர்தல் ரத்துசெய்யப்பட்டுவிட்டது. 'இந்தமுறை வெற்றி கிடைக்கும்' என தினகரன் நம்பவில்லை. கள நிலவரம் கடுமையாக இருப்பதை உணர்ந்து வைத்திருக்கிறார். கடந்த 29-ம் தேதி சசிகலாவிடம், இதுகுறித்து விவாதிப்பதற்காக பெங்களூரு சிறைக்குச் சென்றார் தினகரன். சிறை சந்திப்பில் சசிகலா கேட்ட பல கேள்விகளுக்கு தினகரனால் பதில் அளிக்க முடியவில்லை" என விவரித்த சசிகலா உறவினர் ஒருவர், 

சசிகலா"சிறை சந்திப்பின்போது, குடும்ப ஆட்களைப் பற்றி ஏராளமான புகார்களை வாசித்திருக்கிறார் தினகரன். 'தேர்தலில் யார் நிற்க வேண்டும் என நீங்களே முடிவெடுங்கள்' எனக் கூற, இதற்குப் பதில் கொடுத்த சசிகலா, 'இந்தமுறையும் நீயே போட்டியிடு. இரட்டை இலையைவிட அதிக வாக்குகளை நாம் வாங்கினால் போதும். வேறு யாரையும் நிறுத்த வேண்டிய அவசியமில்லை' எனப் பதில் கொடுத்திருக்கிறார். அடுத்ததாக, 'ஏதேனும் செலவு செய்ய வேண்டிய நிலை வந்தால்கூட, விவேக் உள்ளிட்டவர்களிடம்தான் போய் நிற்க வேண்டியிருக்கிறது. விவேக்கும் கிருஷ்ணபிரியாவும் நான் சொல்வதைக் கேட்பதில்லை. பத்திரிகையாளர்களிடம் அவர்களாகவே பேசுகிறார்கள். நிதியைக் கையாளும் பொறுப்பை என்னிடம் கொடுங்கள்' எனக் கேட்க,

இதனை எதிர்பார்க்காத சசிகலா, 'கார்டனில் ரெய்டு நடந்தபோது விவேக்தான் உட்பட குடும்ப ஆட்கள் பலரும் அங்கு இருந்தனர். அப்படி அங்கே போகாமல் இருந்திருந்தால், ஜெயலலிதா பயன்படுத்திய அறையை உடைத்திருப்பார்கள். அந்தநேரத்தில், பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்ததில் என்ன தவறு? அந்த இடத்துக்குச் செல்லாமல் நீ எங்கிருந்தாய்?' எனக் கண்டிப்பான குரலில் கேட்க, ' நான் ஒருவேளையாக தூத்துக்குடி போய் இருந்தேன்' எனச் சொல்ல, ' அப்படியானால், உன்னுடைய ஆட்களையாவது அனுப்பியிருக்க வேண்டியதுதானே...' எனக் கொதிப்பைக் கூட்டியிருக்கிறார். நிதி தொடர்பான விவகாரங்களைக் கையாளும் பொறுப்பைக் கேட்கச் சென்ற தினகரன், ஏமாற்றத்தோடுதான் வெளியில் வந்தார்" என்றார் விரிவாக. 

"ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் கடுமையாக இருப்பதை சசிகலா உணர்ந்து வைத்திருக்கிறார். இந்தமுறை தினகரனுக்கு செக் வைப்பதற்காகவே போட்டியிட உத்தரவிட்டிருக்கிறார். சிறைக்குச் செல்லும்போது, அவர் கொடுத்துவிட்டுச் சென்ற கட்சியை தினகரன் நாசம் செய்துவிட்டார் என்ற கோபம் சசிகலாவுக்கு இருக்கிறது. சசிகலா பக்கம் இருந்த மூன்று எம்.பி-க்கள் கட்சியைவிட்டுப் போனதைப் பற்றி தினகரனுக்கு எந்தக் கவலையும் இல்லை. அதைப் பற்றிப் பேசும்போதும், 'என்னிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றார்கள்' எனக் கூறியதை குடும்பத்தினர் யாரும் ரசிக்கவில்லை. தினகரன் பேசியதைக் கேட்ட நவநீதகிருஷ்ணன், 'டி.டி.வி சாரையும் சின்னம்மாவையும் விட்டு வந்ததை நினைத்து மிகுந்த வேதனையில் இருந்தேன். அந்த வேதனையை டி.டி.வி போக்கிவிட்டார்' என ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறார். இதேபோல்தான், ஜக்கையன் எம்.எல்.ஏ போகும்போதும், ' போனால் போகட்டும்' எனக் கூறிவிட்டார் தினகரன். ' பன்னீர்செல்வத்துக்கு நேரடி எதிரியான ஜக்கையனைக்கூட அவரால் தக்கவைக்க முடியவில்லை' என்ற கோபம் சசிகலாவுக்கு இருக்கிறது. அந்தக் கோபத்தைத்தான் சிறை சந்திப்பில் வெளிக்காட்டியிருக்கிறார். மொத்தத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் என்பது தினகரனுக்கு சசிகலா வைத்த அதிரடி பரிசோதனை. இரட்டை இலையைவிட இரண்டாயிரம் வாக்குகள் அதிகம் வாங்க வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் தினகரன்" என்கின்றனர் கார்டன் நிர்வாகிகள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!