வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து... உயிர் தப்பிய 40 பயணிகள்! | A government bus was caught in the river flood and passengers were recovered by local people

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (01/12/2017)

கடைசி தொடர்பு:16:23 (01/12/2017)

வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து... உயிர் தப்பிய 40 பயணிகள்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அரிகரா நதியின் ஆற்றுப் பாலத்தில் அரசுப் பேருந்து சிக்கியதால் உயிருக்குப் போராடிய 40 பயணிகளைப் பொதுமக்களே மீட்டனர்.

அரசுப் பேருந்து

குமரிக் கடலோரம் மையம் கொண்ட ஒகி புயலின் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீரின் அளவு அதிகரித்துள்ளது. செங்கோட்டைப் பகுதியில்தொடர்ந்து மழை பெய்துவருகிறது. அதனால் தமிழக- கேரள எல்லைப் பகுதியில் சாலைகளில் மரங்கள் சரிந்து விழுந்தன.

தமிழக எல்லையில் விழுந்துகிடந்த மரங்களைக் காவல்துறையினரும் வனத்துறையினரும் உடனடியாக அப்புறப்படுத்தினர். அதனால் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் சென்றது. ஆனால், கேரள எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. அங்கு 4 மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. பின்னர், கேரள வனத்துறையினர் மரக்கிளைகளை மட்டும் அகற்றி சாலையின் ஒரு பகுதி வழியாகப் போக்குவரத்துக்கு அனுமதித்தனர். வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலைமை உருவானது. 

இதனிடையே, நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அரிகரா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளம் காரணமாகப் பாலத்தின் மீது தண்ணீர் சென்றது. அந்த ஆற்றுப்பாலத்தில் எர்ணாகுளத்திலிருந்து வந்த அரசுப் பேருந்து சிக்கிக் கொண்டது. வெள்ளத்தில் பேருந்து சிக்கிய நிலையில், அதன் உள்ளே வெள்ளம் புகுந்தது. அதனால் பயணிகள் அலறினார்கள். பேருந்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 40 பயணிகள் சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர், பேருந்தையும் நீரில் இருந்து மீட்கும் நடவடிக்கைகள் நடந்துவருகின்றன.