வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (01/12/2017)

கடைசி தொடர்பு:15:00 (01/12/2017)

புதிய கட்-அவுட்கள் அமைக்கும் அ.தி.மு.க! காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு

`கோவையில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்ட கட்-அவுட், ஃப்ளெக்ஸ் பேனர்களை உடனே அகற்ற வேண்டும்' என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் புதிய கட்-அவுட்களை அமைக்கும் பணியில் அ.தி.மு.க-வினர் மும்முரமாகியுள்ளனர்.

கோவையில், வரும் 3-ம்தேதி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக கடந்த 10 நாள்களுக்கு முன்பே கட்-அவுட் அமைக்கும் பணியைத் தொடக்கிய அ.தி.மு.க-வினர், கோவையின் அதிமுக்கிய சாலையான அவினாசி சாலையை கட்-அவுட்களால் மூட ஆரம்பித்தார்கள். பல இடங்களில் அமைக்கப்பட்ட  அலங்கார வளைவுகள் முக்கால்வாசி சாலையை மறைத்துக்கொண்டு மக்களுக்கு மிகவும் ஆபத்தாக இருந்தன. அந்த வழியாகத் தினமும் அலுவலகத்துக்கு வரும் ஓர் அரசு அதிகாரியின் மனதைக்கூட அது உறுத்தவில்லை!

கடந்த 24-ம்தேதி, கோவை மருத்துவக் கல்லூரி அருகே விதிமீறி வைக்கப்பட்ட கட்-அவுட்டால் ரகுபதி என்ற வாலிபர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகுதான் கோவை முழுவதும் அனுமதியின்றி வைக்கப்படிருந்த கட்-அவுட்கள் எல்லோர் கண்களுக்கும் தெரிய ஆரம்பித்தன. இளைஞர்கள் சமூகவலைதளத்திலும் சமூக ஆர்வலர்கள் சட்டப்படியும் அ.தி.மு.க-வினரின் கட்-அவுட் அராஜகத்துக்கு எதிராகக் கொந்தளிக்க ஆரம்பித்தார்கள். விபத்தில் சிக்கிப் பலியான ரகுபதியின் குடும்பத்தினர் தன் உறவினர் என்பதால் அவர்களை மீடியாவிடம் பேசவிடாமல் ஆஃப் செய்த அமைச்சர் வேலுமணி, 'நாங்கள் விதிகளை மீறி ஒரு கட்-அவுட்கூட வைக்கவில்லை' என்று வெளிப்படையாகச் சொன்னார்.

ஆனால், தி.மு.க விடுவதாக இல்லை. விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள அத்தனை கட்- அவுட்களையும் ஃப்ளெக்ஸ் பேனர்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றத்துக்குப் போனார் சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவையில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள அத்தனை கட்-அவுட்களையும் பேனர்களையும் உடனே அகற்ற வேண்டும். வைக்கப்படும் பேனர்கள் பொதுமக்களைப் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். பேனர் வைப்பதற்காகச் சாலையைத் துளையிடக் கூடாது, போடப்பட்ட துளைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் சாலையில் பேனர் வைக்கவே கூடாது. யாரையும் தொந்தரவு செய்யாத வகையில் பேனர்களை வைத்துக்கொள்ளலாம். ஆனால், அதில் அனுமதி எண் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. 

இந்தத் தீர்ப்பு யார் காதிலும் விழுந்த மாதிரி தெரியவில்லை. தீர்ப்பு வந்ததும் பேருக்கு இரண்டு மூன்று கட்-அவுட்களை அகற்றினார்கள். ஆனால், அதைவிட அதிகமான கட்-அவுட்களைப் புதிதாக அமைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. அதற்காக அவினாசி சாலையைத் துளையிட ஆரம்பித்துள்ளார்கள்.